சாலை விபத்துகளுக்கு தனி நீதிமன்றம்; மலேசியாவில் கோரிக்கை

உயிரிழப்புகள் அதிகமாக இருப்பதால் தனி நீதிமன்றம் தேவையென வழக்கறிஞர்கள் கருத்து

சாலை விபத்துகளுக்கு தனி நீதிமன்றம்; மலேசியாவில் கோரிக்கை

1 mins read
a5b6644d-5750-457e-88a0-45300788b5cb
சாலை விபத்து தொடர்பான வழக்குகள் சிக்கலானவை அல்ல, ஆனால், எண்ணிக்கையில் அதிகம் என்று மூத்த வழக்கறிஞர் கிட்சன் ஃபூங் கூறியுள்ளார். - கோப்புப் படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் உயிரிழக்கும் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், சாலை விபத்துகளுக்கென தனி நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் கிட்சன் ஃபூங் கூறியுள்ளார்.

சாலை விபத்து தொடர்பான வழக்குகள் சிக்கலானவை அல்ல, ஆனால், எண்ணிக்கையில் அதிகம். அவை விரைந்து தீர்க்கப்பட வேண்டும் என்றார் அவர்.

ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருப்பவர் விபத்தில் சிக்கினால், அந்த குடும்பம் நீதிக்காக பல ஆண்டுகள் காத்திருக்க முடியாது. மருத்துவச் செலவுகளும் குழந்தைகளின் பள்ளிக் கட்டணமும் நீதிமன்றத் தேதிக்காகக் காத்திருப்பதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை நீதிமன்ற வழக்குகளின் எண்ணிக்கை 63 விழுக்காடு அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய திரு கிட்சன்,, சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளில் உள்ளதைப்போலத் தனித் தீர்ப்பாயங்கள் தேவை என்றார்.

சாலைப் பாதுகாப்பு ஆய்வாளர் லா தேக் ஹுவா, சமூக ஆர்வலர் லீ லாம் தாய் ஆகியோரும் இதை ஆதரித்தனர்.

வாகனத் தடயவியல், மருத்துவ அறிக்கைகளை ஆய்வுசெய்ய நீதிபதிகளுக்குத் தனித்திறன் அவசியம் என்று அவர்கள் கூறினர்.

தண்டனையோடு குற்றவாளிகளுக்குச் சீர்திருத்தப் பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும் என்றார் முன்னாள் வழக்கறிஞர் மன்றத் தலைவர் சலீம் பஷீர்.

குறிப்புச் சொற்கள்