தொடர் கொலையாளி சார்ல்ஸ் சோப்ராஜ் நேப்பாளச் சிறையிலிருந்து விடுதலை

தொடர் கொலையாளி சார்ல்ஸ் சோப்ராஜ் நேப்பாளச் சிறையிலிருந்து விடுதலை

2 mins read
bcc0e730-cff1-4197-b155-32ff07ab65dc
காத்மாண்டு சிறையிலிருந்து வெள்ளிக்கிழமை விடுதலை செய்யபபட்ட சார்ஸ் சோப்ராஜ். படம்: ஏஎஃப்பி -
multi-img1 of 2

பிரான்சைச் சேர்ந்த தொடர் கொலைகாரனான சார்லஸ் சோப்ராஜ், நேப்பாளச் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நேப்பாளத்தில் ஓர் அமெரிக்கப் பெண்ணையும் கனடா வைச் சேர்ந்த அவரது தோழியையும் கடந்த 1975ஆம் ஆண்டு காத்மாண்டுவில் கொலை செய்த குற்றத்திற்காக சோப்ராஜுக்கு 19 ஆண்டுகள் விதிக்கப்பட்டிருந்தது.

அவரது வயது, நன்னடத்தை ஆகியவற்றைக் காரணம் காட்டி நேப்பாள உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டது.

அவருக்கு இதய நோய் இருப்பதால் அவருக்கு தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்று அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டிருந்தனர்.

மேலும், 15 நாட்களுக்குள் பிரான்சுக்கு சோப்ராஜ் திரும்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

1970களில் இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு வந்த மேற்கத்திய சுற்றுப்பயணிகளைக் கொலை செய்தவர் சோப்ராஜ்.

பத்துக்கு மேற்பட்ட நாடுகளில் சோப்ராஜ் 15 பேரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவைச் சேர்ந்த தந்தைக்கும் வியட்னாமிய தாய்க்கும் பிறந்த சோப்ராஜ், கொள்ளையனாக மாறி, பல நாடுகளுக்கும் பயணம் செய்தார். தனது கொலைகளை அவர் தாய்லாந்தில் தொடங்கினார்.

'பிக்கினி கொலைகாரன்' என்று அறியப்பட்ட சோப்ராஜ், விலைமதிப்புள்ள கற்களை விற்பதற்காக தாம் கொன்றவர்களின் பாஸ்போட்டுகளைப் பயன்படுத்தினார்.

இந்தியாவிலும் தமது வேலையைக் காட்டிய அவர் 1976ல் அங்கு கைதானார்.

பல்வேறு குற்றங்களுக்காக சிறையிருந்த சோப்ராஜ், 1986ல் புதுடெல்லி சிறையிலிருந்து தப்பித்தார், அதுவும் சிறைக் காவலர்களுக்கு போதைமருந்து கலந்த மிட்டாய்கள் கொடுத்துவிட்டு.

மீண்டும் சிறைப்பிடிக்கப்பட்ட அவர் 2003ல் விடுதலை செய்யப்பட்டார்.

தாய்லாந்தில் புரிந்த குற்றங்களுக்காக அவரை அனுப்பும்படி அந்நாட்டு அரசாங்கம் முன்வைத்த கோரிக்கைகள் காலதாமதத்தால் நிறைவேறவில்லை.

2004ல் வேறு பெயரில் நேப்பாளத்துக்குள் நுழைந்து ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கிய சோப்ராஜ், விரைவில் அடையாளம் காணப்பட்டார்.

நேப்பாளச் சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்டது.