தொடர் கொலையாளி சோப்ராஜை விடுவிக்க நேப்பாள நீதிமன்றம் உத்தரவு

தொடர் கொலையாளி சோப்ராஜை விடுவிக்க நேப்பாள நீதிமன்றம் உத்தரவு

1 mins read
2d0b21d0-7366-4454-94f1-44b689a601d2
2011 மே 31ஆம் தேதி காத்மாண்டு நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு அழைத்துச் செல்லப்படும் சார்ல்ஸ் சோப்ராஜ். கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் -

நேப்பாள சிறையில் உள்ள தொடர் கொலையாளி சார்ல்ஸ் சோப்ராஜை விடுவிக்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1970களில் ஆசியா முழுவதும் நடந்த தொடர் கொலைகளுக்கு காரணமானவர் பிரெஞ்சு தொடர் கொலையாளி சோப்ராஜ், 78.

இவர் இரண்டு வட அமெரிக்க சுற்றுப்பயணிகளைக் கொன்ற வழக்கில் 2003ல் நேப்பாளத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடல் நலக்குறைவை காரணம் காட்டி தன்னை விடுவிக்க வேண்டும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் சோப்ராஜ் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சோப்ராஜை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

சோப்ராஜை தொடர்ந்து சிறையில் அடைத்திருப்பது மனித உரிமைகளுக்கு எதிரானது என்று நீதிமன்றம் அதன் தீர்ப்பில் கூறியது.

அவரை சிறையில் அடைத்திருக்க அவர் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்பதால் உடனடியாக அவரை விடுவித்து, 15 நாள்களுக்குள் அவரது சொந்த நாடான பிரான்சுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1976ல் டெல்லி ஹோட்டலில் பிரெஞ்சு சுற்றுப்பயணி விஷம் குடித்து இறந்த வழக்கில், சோப்ராஜ் இந்தியாவில் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அவருக்கு 12 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 1986ல் சிறையிலிருந்து தப்பிச்சென்ற அவர் மீண்டும் கோவாவில் பிடிபட்டார்.

1997ல் விடுவிக்கப்பட்ட சோப்ராஜ் உடனடியாக பாரிஸ் சென்றார். ஆனால் வேறொருவரைக் கொன்றதற்காக 2003ல் நேப்பாளத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.