கூச்சிங்: விமானச் சேவையின் நம்பகத்தன்மை, செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக, ஏர்போர்னியோ நிறுவனத்தின் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதனால் கிட்டத்தட்ட4,000 பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டமிடப்படாத பராமரிப்புப் பணிகள் காரணமாக ஏர்போர்னியோ நிறுவனத்தின் பல ‘ஏடிஆர்72’ ‘டிஎச்சி-6 ட்வின் ஆட்டர்’ ரக விமானங்கள் தற்காலிகமாகச் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
ஜூலை 6ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்தத் தற்காலிக மாற்றங்கள் அக்டோபர் 24ஆம் தேதி வரை நீடிக்கும் என்று ஏர்போர்னியோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மலேசிய அரசுக்குச் சொந்தமான ஏர்போர்னியோ நிறுவனம், குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மட்டுமே சேவை பாதிப்பு இருக்கும் என்று கூறியுள்ளது.
கடைசி நேர விமான ரத்து நடவடிக்கைகளைக் குறைக்கவும், அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் இந்தத் தற்காலிக மாற்றங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக முக்கிய விமானப் பாகங்கள், உதிரிப்பாகங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதன் காரணமாக கூடுதல் நேரத்தை எடுப்பதாகவும் ஏர்போர்னியோ விளக்கியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பல விமான நிறுவனங்கள் இத்தகைய சவால்களை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அந்நிறுவனம், பழுதுபார்ப்புப் பணிகளை விரைவுபடுத்தி, பாதிக்கப்பட்ட விமானங்களை மீண்டும் சேவைக்குக் கொண்டுவரப் பொறியியல் பங்காளிகள், விமான உற்பத்தியாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகக் கூறியது.
மாற்றியமைக்கப்பட்ட கால அட்டவணையின்படி கிட்டத்தட்ட 594 விமானங்களின் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும் 1,337 விமானங்கள் வேறு நேரத்திற்கு மாற்றப்படுகின்றன.
சேவை மாற்றங்களால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு, அதே நாளில் அல்லது அதற்கு அடுத்த நாளில் கிடைக்கக்கூடிய விமானத்தில் பயண இடங்கள் மாற்றியமைத்துத் தரப்படும்.
ஏர்போர்னியோ விமான நிறுவனம் தற்போது சேவை வழங்கும் அனைத்து இடங்களுக்கும் தொடர்ந்து விமானங்கள் இயக்கப்படும் என்றும் எந்தவொரு வழித்தடமும் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ நிறுத்தப்படாது என்றும் உறுதியளித்துள்ளது.
இந்தத் தற்காலிக மாற்றங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட வழித்தடங்களில் விமானக் கட்டணங்கள் உயர்த்தப்படாது என்றும் பயணிகளுக்கு நிறுவனம் உறுதி அளித்தது.

