சிட்னி: ஆஸ்திரேலியாவின் இரண்டாவது ஆகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஆப்டஸ், அந்நாட்டின் மூன்று மாநிலங்களில் பயனர்களைப் பாதித்த சேவைத் தடைக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.
அந்த சேவைத் தடையால் சில அவசர அழைப்புகளும் பாதிக்கப்பட்டன.
அச்சம்பவம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) நிகழ்ந்தது. அதற்கு மறுநாளான சனிக்கிழமை (செப்டம்பர் 12), சிங்டெல் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆப்டஸ் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.
அந்த சேவைத் தடை 76 நிமிடங்கள் நீடித்தது. விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா, வடக்கு வட்டாரம் (Northern Territory) ஆகிய பகுதிகளில் பயனர்கள் சிலர் பாதிக்கப்பட்டதாக ஆப்டஸ் அறிக்கை மூலம் தெரிவித்தது.
“பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
சென்ற ஆண்டு ஆப்டசின் கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டது. அதனால் நூற்றுக்கணக்கானோரால் காவல்துறை, தீயணைப்பு, அவசர மருத்துவ உதவி வாகனச் சேவைகளைத் தொடர்புகொள்ள முடியாமல் போனது. அதன் காரணமாக இருவர் உயிரிழக்க நேரிட்டது.
அதைத் தொடர்ந்து தற்போதைய சேவைத் தடை ஏற்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் மூத்த அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் கிறிஸ் போவன், ஆப்டஸ் வாடிக்கையாளர்கள் மறுபடியும் ஒரு சேவைத் தடையால் பாதிக்கப்பட்டிருப்பது மிகுந்த கவலை தருவதாகக் கூறியுள்ளார். தேவையான எல்லா விசாரணைகளும் தொடங்கிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

