ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதில் பின்னடைவு

அமெரிக்காவிடம் ஈரான் நிபந்தனைகள் விதிப்பு

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதில் பின்னடைவு

2 mins read
785a0dda-284d-407c-8001-3e11ccdd306b
ஆகஸ்ட் 6ஆம் தேதி, ஓமானின் முசந்தம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட படத்தில், ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே காணப்படும் கப்பல்கள். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

டெஹ்ரான்: அமெரிக்காவிற்குப் பல்வேறு நிபந்தனைகளை ஈரானின் மூத்த தேசிய பாதுகாப்பு அதிகாரி முகம்மது பாகர் ஸுல்காதர் முன்வைத்துள்ளார். இதனால், உலக வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்த எதிர்பார்ப்புகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையையும் ஈரான் மீதான பொருளியல் தடைகளையும் முழுமையாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், வட்டாரத்தில் உள்ள அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஸுல்காதர் கோரியுள்ளார்.

முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துகளை விடுவிப்பதுடன், ஈரானின் நட்பு நாடுகள் மீதான தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளார். கடந்த பிப்ரவரியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. தற்போது ஈரானும் ஓமானும் நீரிணையை நிர்வகிப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. ஆனால், ஓமானுடன் ஒப்பந்தம் எட்டப்பட்டாலும், ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்கா முழுமையாக ஏற்றால் மட்டுமே நீரிணை திறக்கப்படும் என்று ஈரானிய புரட்சிகரக் காவற்படையின் செய்தித் தொடர்பாளர் உசேன் மொஹெபி தெளிவுபடுத்தியுள்ளார். ஈரானிய வெளியுறவு அமைச்சர் அபாஸ் அராக்சியும், ஓமானுடன் ஒப்பந்தம் எட்டப்படும் நிலையை நெருங்கிவிட்டதாகக் கூறினார். இருப்பினும், ஜூன் மாதம் கையெழுத்தான இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா மீறியதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து நடைபெறும் மோதல்களால் ஹோர்முஸ் நீரிணையில் இதுவரை 15க்கும் மேற்பட்ட கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன. போர் தொடங்குவதற்கு முன் தினசரி சராசரியாக 130 கப்பல்கள் சென்றுவந்த வேளையில், கடந்த வாரம் தினமும் வெறும் 10க்கும் மேற்பட்ட கப்பல்களே நீரிணையைக் கடந்து சென்றன.

குறிப்புச் சொற்கள்
ஈரான்அமெரிக்காபோர்