மலேசிய-தாய்லாந்து எல்லை துப்பாக்கிச்சூடு தொடர்பாக எழுவர் கைது

மலேசிய-தாய்லாந்து எல்லை துப்பாக்கிச்சூடு தொடர்பாக எழுவர் கைது

2 mins read
0d63844f-9433-46e8-9cce-29357c9d585e
கைது செய்யப்பட்டவர்கள் 22 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். - படம்: மலாய் மெயில்

கோலாலம்பூர்: மலேசிய-தாய்லாந்து எல்லையில் மலேசிய எல்லைப் பாதுகாப்புப் படையின் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் தாய்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் உள்ளார். சம்பவம் நிகழ்ந்த 24 மணி நேரத்திற்குள் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

“எல்லைப் பாதுகாப்பே எங்களது தலையாயப் பணி. எந்த ஓர் அச்சுறுத்தலுக்கும் தலைவணங்க மாட்டோம்.

“எல்லையில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பில் 24 மணிநேரத்தில் கைது நடவடிக்கை தொடங்கி விட்டது,” என்று மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதின் நாசுஷன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தை வியாழக்கிழமை (பிப்ரவரி 26) நாடாளுமன்றத்தில் விவரித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

கைது செய்யப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

கடந்த புதன்கிழமை (பிப்ரவரி 25) அதிகாலை 5.40 மணியளவில், தாய்லாந்து எல்லையில் உள்ள கெடா மாநிலத்தின் புக்கிட் காயு ஹித்தாம் என்னும் இடத்தில், எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் மூத்த துணை ஆணையர் முஹம்மது நசருதின் முஹம்மது நாசிர் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது மோட்டார்சைக்கிளில் சென்ற இரு ஆடவர்கள் அந்த வாகனத்தை நோக்கி சுட்டனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக கெடா மாநில காவல்துறைத் தலைமை அதிகாரி அட்ஸ்லி அபு ஷா வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) செய்தியாளர்களிடம் பேசினார்.

கைது செய்யப்பட்ட எழுவரும் 22 வயதுக்கும் 52 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரங்களிலேயே அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சந்தேக நபர்களைச் சுற்றி வளைத்ததாக அவர் தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூடு நடைபெற்ற புக்கிட் காயு ஹித்தாமிலும் பெர்லிஸ் மாநிலத்தின் பாடாங் பசாரிலும் காவல்துறை அதிகாரிகள் காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் சந்தேக நபர்கள் சிக்கியதாகவும் அவர் சொன்னார்.

ஆறு ஆடவர்களும் அந்த ஆடவர்களில் ஒருவரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் அறிமுகமானவர்கள். மேலும், அவர்களில் நால்வர் கடுமையான குற்றப் பின்னணிகளைக் கொண்டவர்கள் என்று திரு அபு ஷா கூறினார்.

குறிப்புச் சொற்கள்