கென்டிங் மலை: ஜாலான் கென்டிங் ஹைலண்ட்ஸ்-கென்டிங் சாம்பா சாலை நெடுகில் இரண்டு சுற்றுலா பேருந்துகளும் ஒரு காரும் சிக்கிய விபத்தில் ஏழு பேர் காயம் அடைந்தனர்.
சனிக்கிழமை (மே 30) இந்த விபத்து நிகழ்ந்தது.
உள்ளூர் ஊடகமான பெர்னாவைச் சுட்டிக்காட்டிய த ஸ்டார், பாகாங் தீயணைப்பு, மீட்புத் துறைக்கு மாலை 5.29 மணியளவில் விபத்துக் குறித்துத் தகவல் கிடைத்ததாகக் கூறியது.
இதையடுத்து மாலை 6.06 மணியளவில் கென்டிங் ஹைலண்ட்ஸ், தீயணைப்பு நிலையத்தின் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தன.
ஒரு சுற்றுலாப் பேருந்தில் இருந்த 36 நேப்பாள பயணிகளில் ஆறு பேர் காயம் அடைந்தனர் என்று மீட்புப் பிரிவின் உதவி இயக்குநரான முகம்மது சலாலுதீன் இசா தெரிவித்தார்.
இரண்டாவது சுற்றுலாப் பேருந்தில் இருந்த பங்ளாதேஷ், நேப்பாள நாட்டவர்களில் யாரும் காயம் அடையவில்லை.
அதே சமயத்தில் காரில் பயணம் செய்த மூவரில் ஒருவர் காயம் அடைந்தார்.
தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு முன்பே அனைத்து வாகனங்களில் இருந்து அனைவரும் வெளியேறிவிட்டனர். காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே கவனக் குறைவாக வாகனத்தை ஓட்டியதாக 55 வயது பேருந்து ஓட்டுநரைக் காவல்துறை கைது செய்தது.
முதல் பேருந்து ஒரு வளைவில் கட்டுப்பாட்டை இழந்து, ஒரு காரின் பின்புறத்தில் மோதி, பின்னர் இரண்டாவது பேருந்தின் பின்புறத்தில் மோதியதாக நம்பப்படுகிறது என்று பெந்தோங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஸைஹாம் மகம்மது காஹார் கூறினார்.
“இந்த மோதலில், இரண்டாவது விரைவுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறத்தில் சறுக்கி கவிழ்ந்தது. அதே நேரத்தில் முதல் பேருந்து சாலையின் வலதுபுறமாகத் திரும்பி நின்றது,” என்று அவர் விவரித்தார்.
முதல் பேருந்து, விபத்துக்குக் காரணம் என்று நம்பப்படுவதால் அதன் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்.

