ரெம்பாவ்: மத்திய கிழக்குப் போர்ச்சூழலால், ஹோர்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள ஏழு மலேசியக் கப்பல்களும் விரைவில் நாடு திரும்புவதற்கு அனுமதி கிடைக்கும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஹசான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சருடன் தாம் பேசியிருப்பதாகவும், அதனைத் தொடர்ந்து மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசி வாயிலாக உரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஈரான் அரசு இந்தக் கப்பல்களைக் கடந்து செல்ல அனுமதி அளித்துள்ளது. எந்த நேரத்திலும் எண்ணெய்க் கப்பல்கள் அங்கிருந்து புறப்படலாம் என்றார் அவர்.
பெட்ரோனாஸ், எம்ஐஎஸ்சி, சபுரா ஆகிய நிறுவனங்களுக்குச் சொந்தமான அந்தக் கப்பல்கள், தகவல் தொடர்புச் சிக்கல்கள், அப்பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலால் தற்காலிகமாகத் தாமதத்தை எதிர்கொண்டன.
ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்து நெரிசல்
தற்போது ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் கிட்டத்தட்ட 2,000 வணிகக் கப்பல்கள் நிலைகுத்தி நிற்கும் நிலையில், மலேசியக் கப்பல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஏற்கெனவே உரம் ஏற்றி வரும் மலேசியச் சரக்குக் கப்பல் ஒன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

