மலாக்கா: மலேசியாவின் மலாக்காவில் உள்ள நெடுஞ்சாலையில் திங்கட்கிழமை (டிசம்பர் 23) கார், டிரெய்லர், சுற்றுப்பயணப் பேருந்து உட்பட ஆறு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் எழுவர் உயிரிழந்தனர். அவர்களில் ஐந்து குடும்ப உறுப்பினர்களும் அடங்குவர்.
ஒரு லாரியும் 27 பேர் இருந்த சுற்றுப்பயணப் பேருந்தும் தெற்கு நோக்கிச் சென்றதும் இரு கார்களும் ஒரு டிரெய்லர் வாகனமும் வடக்கு நோக்கிச் சென்றதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அலோர் கஜா காவல்துறைத் தலைவர் அஷாரி அபு சமா தெரிவித்தார்.
31 வயது ஆடவர் ஓட்டிய லாரின் முன் வலது சக்கரம் கழன்று சாலையின் நடுத் தடத்தில் இருந்ததாக அவர் சொன்னார். அச்சக்கரத்தின் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுப்பயணப் பேருந்து, எதிர்த்திசை தடத்திற்கு மாறியது.
“எதிர்த்திசையில் வந்த டிரெய்லருடன் அப்பேருந்து மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பின்மீது மோதிய டிரெய்லர், அவ்வழியாக வந்த இரு கார்கள்மீது மோதியது,” என செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) வெளியிட்ட அறிக்கையில் திரு அஷாரி விவரித்தார்.
இதன் விளைவாக, ஒரு காரில் இருந்த ஐவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்த எழுவரில், அடையாளம் காணப்படாத பேருந்துப் பயணியும் அடங்குவர். காயமுற்றவர்கள் மலாக்காவிலும் அலோர் கஜாவிலும் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மலேசியாவின் 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் சட்டப்பிரிவு 41(1)கீழ் இந்த விபத்து குறித்து விசாரணை தொடர்கிறது.