ஜகார்த்தா: ரியாவ் தீவுப் பகுதியில் அரியவகைக் கனிமங்கள், கதிரியக்கத் தனிமங்கள் அடங்கிய 390 டன் தாதுப் பொருள்கள் கடத்தல் முயற்சியை இந்தோனீசிய ராணுவமும் கூட்டுப் பணிக்குழுவும் இணைந்து முறியடித்தன.
அந்த உலோகத் தாதுக்களின் மதிப்பு பல டிரில்லியன் ரூப்பியா அல்லது பல நூறு மில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடத்தல் கனிமங்களை ஏற்றிக்கொண்டுவந்த இரு கப்பல்களும் தற்போது பாத்தாமில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
கனிமக் கடத்தல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான இந்தோனீசிய ராணுவத்தின் தலைமைத் தளபதி தலைமையில் ஓர் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர் மே 26ஆம் தேதி அக்கப்பல்களை நேரில் பார்வையிட்டார்.
மே 17ஆம் தேதி அவ்விரு கலங்களும் சிங்கப்பூர் நீரிணைப் பகுதியில் இடைமறிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவற்றில் மொத்தம் 25 கொள்கலன்கள் இருந்தன. விசாரணையில் அவை கள்ளத்தனமாகப் பொருள்களை ஏற்றிச்சென்றது தெரியவந்தது.
டைட்டானியம் ஆக்சைடு, சிர்க்கோனியம் ஆக்சைடு, தோரியம் ஆக்சைடு, சீரியம் ஆக்சைடு, டிரையுரேனியம் ஆக்டாசைடு உள்ளிட்ட கனிமப்பொருள்கள் அந்தக் கொள்கலன்களில் இருந்தது ஆய்வகச் சோதனைகள்மூலம் கண்டறியப்பட்டது.
இதனிடையே, அந்தத் தாதுப்பொருள்களின் உரிமையாளரான ‘பிடி புத்ராபிரிமா மினரல் மண்டிரி’ நிறுவனம், அபாயகரமான அல்லது கதிரியக்கத் தனிமங்களைக் கடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தாங்கள் சீனாவுக்கு ‘இல்மனைட்’ தாதுவை மட்டுமே ஏற்றுமதி செய்வதாகவும் அரசு நிறுவனங்களான பிடி சுகோஃபிண்டோ மற்றும் சுங்கத்துறையின் முறையான ஆய்வகச் சோதனைகளுக்குப் பிறகு உரிய அமைப்புகளிடம் அனுமதி பெற்றுள்ளதாகவும் அந்நிறுவனத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இந்தோனீசியாவால் தடைசெய்யப்பட்ட அபாயகரமான பொருள்கள் எதையும் தாங்கள் கடத்தவில்லை என்று அவர் சொன்னார்.
மேலும், சுங்கத்துறையின் அதிகாரத்துவ நடைமுறைகளின்றி, கடற்படையினர் தன்னிச்சையாகக் கொள்கலன்களின் முத்திரைகளை உடைத்து சோதனை செய்யக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும், நாட்டின் வருவாயைப் பாதிக்கக்கூடிய, இயற்கை வளங்களின் பாதுகாப்பிற்கு மிகுந்த அச்சுறுத்தலாக விளங்கும் இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என இந்தோனீசியக் கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

