கியவ்: உக்ரேனியப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு காயமுற்ற வடகொரிய ராணுவ வீரர்கள் பலர் இறந்துவிட்டதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். “குறைந்தபட்ச பாதுகாப்புடன்” அந்த வீரர்களைப் போர்க்களத்தில் இறக்கியதாக ரஷ்யாவை அவர் சாடியுள்ளார்.
ரஷ்ய ராணுவத்திற்கு ஆதரவாக, ஆயிரக்கணக்கான வீரர்களை வடகொரியா அனுப்பியுள்ளதாக உக்ரேனும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் கூறுகின்றன. 2022ல் உக்ரேன்மீது ரஷ்யப் படையெடுப்பு தொடங்கி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகிவிட்ட நிலையில், இந்த நிலவரம் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
திரு ஸெலென்ஸ்கி, வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) மாலை சமூக ஊடகத்தில் வெளியிட்ட காணொளிப் பதிவில், “இன்று, வடகொரியாவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பலர் குறித்த செய்திகள் வெளிவந்தன. எங்கள் ராணுவ வீரர்கள் அவர்களைச் சிறைபிடித்தனர். ஆனால், கடுமையாகக் காயமுற்ற அவர்களைப் பிழைக்கவைக்க முடியவில்லை,” என்று தெரிவித்தார்.
உக்ரேனுக்கு எதிராக ரஷ்யாவின் போரில் ஈடுபட்ட வடகொரிய வீரர் ஒருவர், உக்ரேனியப் படைகளிடம் பிடிபட்டதைத் தொடர்ந்து அவர் உயிரிழந்ததாக தென்கொரியாவின் உளவு பார்க்கும் அமைப்பு ஒன்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.
உக்ரேனியப் படைகளிடம் பிடிபட்டதை அடுத்து எத்தனை வடகொரிய வீரர்கள் உயிரிழந்தனர் என்பதை திரு ஸெலென்ஸ்கி குறிப்பிடவில்லை.
மேற்கு உக்ரேனின் கர்ஸ்க் பகுதியில் போரிடுவதற்காக ரஷ்யப் படைகளுடன் சேர்ந்த கிட்டத்தட்ட 3,000 வடகொரிய வீரர்கள் இதுவரை “கொல்லப்பட்டனர் அல்லது காயமுற்றனர்” என திரு ஸெலென்ஸ்கி முன்னதாகக் கூறியிருந்தார்.
போரில் கொல்லப்பட்ட, அல்லது காயமுற்ற வடகொரிய வீரர்களின் எண்ணிக்கை 1,000 என தென்கொரியாவின் உளவுத்துறை முன்னதாகச் சொல்லியிருந்தது. அவர்களுக்குப் பரிட்சயமில்லாத போர்க்களமும் வானூர்தித் தாக்குதல்களை எதிர்கொள்ள போதிய ஆற்றல் இல்லாததும் உயிரிழப்புகள் அதிகரித்ததற்குக் காரணம் என்று உளவுத்துறை கூறியிருந்தது.