தோக்கியோ: ஜப்பான் முழுதும் உள்ள தொழிற்சாலைகள், மீன் பண்ணைகள், பட்டறைகள் முதலியவை இயங்க ஆணிவேராக இருக்கின்றனர் வெளிநாட்டு ஊழியர்கள்.
பக்கத்து நாடுகளில் ஊழியர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளம் கூடிவருகிறது. அதனால் ஜப்பானில் உள்ள ஏராளமான வர்த்தக உரிமையாளர்கள், ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் ஈர்ப்பை நாடு கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து வருவதாக அஞ்சுகின்றனர்.
ஜப்பானின் சர்ச்சைக்குரிய தொழில்நுட்பப் பயில்நிலைப் பயிற்சித் திட்டம் குறைகூறலுக்கு உள்ளாகியிருக்கிறது. குறைவான சம்பளத்திற்கு ஊழியர்களை வேலைக்கு எடுக்க அது பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
1993ஆம் ஆண்டு நிறுவப்பட்ட திட்டம், கடுமையான வேலைச் சூழல் இருப்பதாகவும் மனித உரிமை மீறப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. திட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது ஜப்பான். புதிய திட்டம் 2027ல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தோக்கியோவுக்குக் கிழக்கே, சிபா வட்டாரத்தில் உள்ளது ஆகப் பெரிய சோஷி துறைமுகம். வெளிநாட்டு ஊழியர்களை ஜப்பான் எந்த அளவுக்குச் சார்ந்துள்ளது என்பதையும் அவர்களைத் தக்கவைத்துக்கொள்ள என்னென்ன முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்பதையும் அங்கு நேரடியாகப் பார்க்கலாம்.
சோஷியில், தகரக் குவளைகளில் உணவுப்பொருள்களை அடைக்கும் தொழிற்சாலையில் 80 பேர் வேலை செய்கின்றனர். அவர்களில் 16 பேர் வியட்னாமைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஜப்பானில் தொழில்நுட்பப் பயில்நிலைப் பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.
“வெளிநாட்டு ஊழியர்கள் இல்லாமல் சோஷியின் முக்கியத் தொழில்துறையால் இயங்க முடியாது,” என்றார் தவாரா எனும் அந்தத் தொழிற்சாலையின் தலைவர் யோஷிஹிசா தவாரா.
“மீன் பிடித்தல், பிடித்த மீன்களைக் கரைக்குக் கொண்டுவருதல், பதப்படுத்துதல், மொத்தமாக விற்பனை செய்தல் என எல்லாக் கட்டங்களிலும் வெளிநாட்டு ஊழியர்கள் ஆதரவளிக்கின்றனர்,” என்று அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
சோஷி மட்டும் இதில் தனியாக இல்லை. ஜப்பான் முழுதும் பல வட்டாரத் தொழில்கள் வெளிநாட்டினரையே நம்பியிருக்கின்றன.
திரு தவாரா, பயிற்சிக்கு வருவோருடன் நம்பிக்கையான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறார். இருந்தும் எதிர்காலம் குறித்து அவர் கவலைப்படுகிறார்.
“ஜப்பானியப் பொருளியல் தேக்கமடைந்துள்ளது. ஒப்புநோக்க வியட்னாமின் பொருளியல் வேகமாக வளர்ச்சி காண்கிறது,” என்று அவர் சொன்னார்.
“ஜப்பானைவிட அதிக ஊதியம் கொடுக்கும் நாடுகள் உள்ளன. அதனால் ஊழியர்கள் தொடர்ந்து ஜப்பானைத் தெரிவுசெய்வார்களா என்பது எனக்குத் தெரியவில்லை,” என்றார் திரு தவாரா.
தம்மோடு வேலை செய்யும் ஊழியர்களைப் பார்த்துக்கொள்வது தமது பொறுப்பு என்கிறார் அவர். அப்பாவைப் போன்று அவர்களைக் கவனித்துக்கொள்வேன் என்று திரு தவாரா சொல்கிறார்.
ஊழியர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. அவர்களுக்கும் எதிர்காலத் திட்டங்கள் உள்ளன. அதனால் ஜப்பானில் வேலை செய்ய முடிவெடுத்தால் தொடர்ந்து அவர்களுக்கு உறுதுணையாய் இருப்பது முக்கியம் என்கிறார் திரு தவாரா.

