சோல்: தென்கொரியத் தலைநகர் சோலின் கங்னம் வட்டாரத்தில் மூண்ட பெரும் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர ஏறக்குறைய 300 தீயணைப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீச்சம்பவத்தில் உயிருடற்சேதம் இல்லை என்றபோதும் 47 குடியிருப்பாளர்கள் சம்பவ இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக சோல் நகராட்சி தீயணைப்பு, பேரிடர் தலைமையகம் தெரிவித்தது.
கடுமையாக மூண்ட தீ அருகில் உள்ள மலைப்பகுதிக்கும் பரவக்கூடிய அபாயம் இருந்ததால் அதிகாரிகள் எச்சரிக்கை நிலையை இரண்டாம் கட்டத்துக்கு உயர்த்தினர்.
தீயைக் கட்டுக்குள் கொண்டுவர 85 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன. எனினும், கடும் தூசுமூட்டத்தாலும் நகரைச் சுற்றி சாம்பல் எழும்பியதாலும் தங்களால் ஹெலிகாப்டரை அனுப்ப முடியவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தீயில் சிக்கியுள்ளோரை மீட்கவும் தீயைத் துரிதமாக அணைக்கவும் பணியில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் ஈடுபடுத்தும்படி தென்கொரியப் பாதுகாப்பு அமைச்சர் யுன் ஹோ ஜங் உத்தரவிட்டார்.
தீ மூண்ட பகுதி குரியோங் கிராமம் என்று அறியப்படுகிறது. சோலின் ஆகப் பணக்கார வட்டாரமான கங்னமிற்கு அருகில் அமைந்துள்ள அந்தக் கிராமத்தில் பெரும்பாலும் தகர வீடுகளில் மக்கள் வாழ்ந்தனர். அங்கு உயர்மாடிக் கட்டடங்கள் கட்ட அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.

