மலேசியாவின் ஜோகூர் பாருவில் சிங்கப்பூரர்கள் அடிக்கடி செல்லும் நிலா உணவகத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) காலை தீப்பிடித்ததில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
ஜோகூர் பாரு அருள்மிகு ராஜமாரியம்மன் ஆலயத்திற்கு எதிரே ஜாலான் உங்கு புவானில் அமைந்துள்ள அந்த உணவகம் சிங்கப்பூர் இந்தியர்களிடையே மிகவும் பிரபலம்.
உணவகம் இருந்த இரண்டு மாடிக் கட்டடம் தீயில் மளமளவென எரியும் காட்சிகள் டிக்டாக் தளத்தில் பரவி வருகின்றன.
“காலை 6 மணியிலிருந்து 6.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் உணவகத்தில் தீப்பிடித்ததாகத் தெரிகிறது,” என்றார் நிலா உணவகத்துக்கு எதிரில் ஆறு ஆண்டாகச் செயல்பட்டுவரும் ஜெருஷா என்டர்பிரைஸ் தையல் கடை உரிமையாளர் அந்தோனிசாமி ஆரோக்கியசாமி.
உணவகத்தில் அடுப்பைப் பற்றவைத்தபோது தீ மூண்டதாக நம்பப்படுவதாய்க் கூறிய அவர், எரிவாயுக் கலன்களும் வெடித்ததாகத் தெரிகிறது என்றார்.
தீ கட்டுக்கடங்காமல் பரவியதில் அருகில் உள்ள கடைகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டன. குறிப்பாக, உணவகத்துக்கு அருகில் உள்ள மைதிலி டிரேடிங் கடையும் தீக்கு இரையானதாக அறியப்படுகிறது.
நிலா உணவகத்துக்கு அருகில் பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு கடை உரிமையாளர் கிட்டத்தட்ட 4, 5 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்ததாகக் குறிப்பிட்டார்.
தீயை அணைக்க முயன்றபோது அது இன்னும் கடுமையாக எரிந்ததாகவும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
பிற்பகல் 2.45 மணிவாக்கில் தீ ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகக் கூறிய கடை உரிமையாளர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு அதிகாரிகள் தொடர்ந்து கடைக்குள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துக்கொண்டிருந்ததைப் பார்த்ததாகக் கூறினார்.
நிலா உணவகத்துக்கு அருகில் உள்ள பாதை பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளது. தீச் சம்பவத்தால் அருகில் உள்ள கடைகளுக்கு வார இறுதியில் வழக்கம்போல வரும் வாடிக்கையாளர்கள் கூட்டம் கணிசமாகக் குறைந்ததையும் உரிமையாளர்கள் குறிப்பிட்டனர்.
தீச் சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

