சூடானில் கடும் உணவு நெருக்கடி: மில்லியன் கணக்கானோர் பாதிப்பு

அரசாங்கம் சாரா அமைப்புகள் தகவல்

சூடானில் கடும் உணவு நெருக்கடி: மில்லியன் கணக்கானோர் பாதிப்பு

2 mins read
ceaf9bfd-34be-4ef8-937a-c30eed590a0a
உணவுக்காகக் காத்துநின்ற சூடானியர்கள். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

ஜெனீவா: சூடானில் மில்லியன் கணக்கான மக்கள் ஒரு நாளில் ஒரு வேளை உணவை மட்டுமே நம்பி உயிர் பிழைத்து வருகின்றனர். உணவு நெருக்கடி அங்கு மோசமாகும் நிலையில், அரசாங்கம் சாரா அமைப்புகள் சில திங்கட்கிழமை (ஏப்ரல் 13) வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

சூடானில் அந்நாட்டு ராணுவத்திற்கும் துணைராணுவ விரைவு ஆதரவுப் படைக்கும் இடையில் போர் தொடங்கி கிட்டத்தட்ட ஈராண்டாகிவிட்டது. போரால் நாடு தழுவிய நிலையில் பசிக்கொடுமை பரவிவருகிறது; மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். உலகின் ஆகப் பெரிய மானுட நெருக்கடிகளில் ஒன்றாக சூடான் பிரச்சினை உருவெடுத்துள்ளது.

“நார்த் டார்ஃபர், சவுத் கோர்டோஃபான் வட்டாரங்களில் மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு அன்றாடம் ஒரு முறை மட்டுமே உணவு கிடைக்கிறது,” என்று அறிக்கை குறிப்பிட்டது.

“அடிக்கடி அவர்களுக்கு ஒரு நாளில் ஒரு முறைகூட உணவு கிடைக்காது,” என்று அது சொன்னது.

ஏராளமானோர், இலைதழைகளையும் கால்நடைத் தீவனங்களையும் உண்டு பிழைத்துவருவதாக அறிக்கை சுட்டியது.

சூடானிய அரசாங்கத்துக்குத் துணையாக இருக்கும் ராணுவமோ, நாட்டில் வறட்சி நிலை இல்லை என்கிறது. இருப்பினும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள வட்டாரங்களில் அத்தகைய நிலைமை ஏற்பட்டதற்குத் தான் பொறுப்பில்லை என்றும் அரசாங்கம் சாரா அமைப்புகள் கூறுகின்றன.

‘மனிதநேயத் தேவைகள், செயல்திட்டம் 2026’ன்படி, சூடானிய மக்கள்தொகையில் 61.7 விழுக்காட்டினர் அதாவது 28.9 மில்லியன் பேர் உணவுக்காக மிகவும் அவதியுறுகின்றனர்.

சூடானின் பல்வேறு பகுதிகளில் இன ரீதியான வன்செயல்கள் இடம்பெறுவதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்திருந்தது. உம் பாரு, கெர்னோய் வட்டாரங்களில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் உணவின்றித் தவிக்கும் ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

விவசாயிகள், வர்த்தகர்கள் உட்பட பலரின் கருத்துகள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. உள்நாட்டுப் போர் எந்த அளவுக்குச் சமூகங்களை வறட்சி நிலைக்குத் தள்ளுகிறது என்பதை அறிக்கை விவரித்தது. பண்ணைகளையும் சந்தைகளையும் வேண்டுமென்றே சிதைத்துப் பசியும் பட்டினியும் போராயுதங்களாய்ப் பயன்படுத்தப்படுவதாகவும் அது தெரிவித்தது.

அதிகரித்துவரும் தேவைகளைச் சமூகச் சமையற்கூடங்களால் சமாளிக்க முடியவில்லை என்றும் நன்கொடையாளர்களின் நிதியுதவி குறைந்ததால் நிவாரண அமைப்புகள் சிரமப்படுகின்றன என்றும் அறிக்கை குறிப்பிட்டது.

வயல்வெளிகளுக்குச் செல்லும் பெண்களும் சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாகும் சாத்தியம் அதிகம் என்றும் அது கூறியது.

குறிப்புச் சொற்கள்
சூடான்உணவுநெருக்கடி