சோல்: தென்கொரியாவின் மிக வெப்பமான நகரமான டேகுவைத் தாண்டி வெப்ப அலை பரவி வருகிறது.
வட கியோங்சாங் மாகாணமும் சுட்டெரிக்கும் வெயிலால் பாதிக்கப்பட்டுள்ளதால் வானிலை அதிகாரிகள் ஜூலை 26ஆம் தேதி கடுமையான வெப்பம் நீடிக்கும் என எச்சரித்துள்ளனர்.
“டேகுவில் மட்டுமன்றி வட கியோங்சாங் மாகாணத்தின் உள்புறங்களிலும் கிழக்குக் கடலோரப் பகுதிகளிலும் அதிக வெப்பநிலை பரவலாகி வருகிறது,” என்று கொரியா வானிலை நிர்வாகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உள்ளூர் நேரப்படி ஜூலை 26 காலை 11 மணிக்கு கொரிய வானிலை நிர்வாகம் கியோங்சான், சியோங்டோ, டேகு உள்ளிட்ட சில பகுதிகளில் கூடுதலாக கடுமையான வெப்ப அலை நீடிக்கும் என்றும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.
குறைந்தது இரண்டு நாள்களுக்குத் தொடரும் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் நீடிக்கும்போது அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் உயரும்போது அல்லது பகல் நேர உச்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் அதிகரிக்கும்போது கடுமையான வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
ஜூலை 26 காலை 10 மணி நிலவரப்படி, டேகுவில் வெப்பநிலை 32.4 டிகிரி செல்சியசை எட்டியது. வட கியோங்சாங் மாகாணத்தின் பிற பகுதிகளில் கியோங்ஜு (33.7 டிகிரி செல்சியஸ்), குமி (32.6 டிகிரி செல்சியஸ்), அன்டோங் (30.7 டிகிரி செல்சியஸ்), போஹாங் (33.2 டிகிரி செல்சியஸ்) என அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

