கடும் நெருக்குதல்; நேப்பாள உள்துறை அமைச்சர் சூடான் குருங் பதவி விலகல்

கடும் நெருக்குதல்; நேப்பாள உள்துறை அமைச்சர் சூடான் குருங் பதவி விலகல்

2 mins read
18aeb7cb-5a47-412b-91b4-52affe03c87c
நேப்பாளத்தின் முந்தைய அரசாங்கத்துக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களில் இறந்த ஒருவரின் குடும்பத்தினருக்கு 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திரு சூடான் குருங் (நடுவில்) ஆறுதல் கூறியபோது எடுக்கப்பட்ட படம். - படம்: ஏஎஃப்பி

காத்மாண்டு: கடந்த மாதம் ஊழல் எதிர்ப்பு நிலைப்பாட்டின் மூலம் தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து, தமது நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து பெருகிவரும் விமர்சனங்களுக்கு மத்தியில் நேப்பாள உள்துறை அமைச்சர் சூடான் குருங் புதன்கிழமையன்று (ஏப்ரல் 22) பதவி விலகினார்.

நேப்பாளத்தின் முந்தைய அரசாங்கத்தை வீழ்த்திய, கடந்த செப்டம்பரில் நடைபெற்ற ‘ஜென் ஸி’ ஆர்ப்பாட்டங்களில் முக்கியப் பங்காற்றிய திரு குருங், தாம் தொடர்பான விவகாரங்களில் நியாயமான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்வதற்காகப் பதவி விலகுவதாகக் கூறினார்.

தமது பதவி விலகல் குறித்த செய்தியை 38 வயது திரு குருங் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.

“என்னைப் பொறுத்தவரை, பதவியைவிட அறநெறியே மேலானது. மக்கள் நம்பிக்கையை விடப் பெரிய சக்தி வேறு எதுவும் இல்லை,” என்றார் அவர்.

அவரது பதவி விலகல் கடிதம் பெறப்பட்டுள்ளதாக நேப்பாளப் பிரதமர் பாலேந்திர ஷாவின் ஊடக ஆலோசகர் திரு தீபா தஹால் தெரிவித்தார்.

குறுகியகால சமூக ஊடகத் தடைக்கு எதிரான ஆர்ப்பாட்டமாகத் தொடங்கி, ஊழல், மோசமான பொருளியல் மீதான பரவலான அதிருப்திகளால் தீவிரமடைந்த வீரியமிக்க ஆர்ப்பாட்டங்களில் திரு. குருங் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2025ஆம் ஆண்டு செப்டம்பர் 7, 8ஆம் தேதிகளில் நடைபெற்ற வன்முறையின்போது குறைந்தது 76 பேர் கொல்லப்பட்டனர். வன்முறை காரணமாக 2,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இவ்வாண்டு ஜனவரி மாதம் ராஷ்டிரிய சுதந்திரா கட்சியில் இணைந்த திரு குருங், மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் அக்கட்சி அமோக வெற்றி பெற்றதையடுத்து நாடாளுமன்றத்தில் ஓர் இடத்தைக் கைப்பற்றினார்.

2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ஆர்ப்பாட்டங்களில் களமிறங்கியோர் மீதான கொடூரமான ஒடுக்குமுறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகக் ஆகியோரைக் கைது செய்து, பதவியேற்ற மறுநாளே திரு குருங் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.

ஆனால் விரைவிலேயே அவரது நிதி முதலீடுகள் மற்றும் சொத்துகள் தொடர்பான குற்றச்சாட்டுகளாலும் பணமோசடி குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தும் சர்ச்சைக்குரிய தொழிலதிபருடனான தொடர்புகளாலும் திரு குருங்கிற்கு சிக்கல் ஏற்பட்டது.

திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 20) குருங் இந்தக் குற்றச்சாட்டுகளை வதந்திகள் என மறுத்திருந்தார்.

“குற்றச்சாட்டுகளும் உண்மையும் ஒன்றல்ல என்பதை மட்டுமே நான் கூற விரும்புகிறேன். முடிவுகள் உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்லாமல், ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும்,” என்று அவர் சமூக ஊடகத்தில் தெரிவித்தார்.

நடத்தை விதிமீறல் பிரச்சினைகள் காரணமாக ஊழியர் நலத்துறை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதிய அரசாங்கத்தில் பதவியிலிருந்து விலகும் இரண்டாவது அமைச்சர் திரு குருங் ஆவார்.

குறிப்புச் சொற்கள்