அமெரிக்காவில் கடும்பனி; விபத்தில் சிக்கிய 100 வாகனங்கள்

1 mins read
8a6c5e93-6120-44d7-a782-83172762c369
 I-196 சாலையில் 30 முதல் 40 கனரக வாகனங்கள் விபத்தில் சிக்கின. - படம்: ஜோமர் சாம்பரோ/ஃபேஸ்புக்

நியூயார்க்: அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள மிச்சிகன் மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் சாலைகள் பனியால் போர்த்தப்பட்டுள்ளன. திங்கட்கிழமை (ஜனவரி 19) காலை வாகனங்களை ஓட்ட ஓட்டுநர்களும் தடுமாறினர். அதன் காரணமாக 100க்கும் அதிகமான வாகனங்கள் விபத்தில் சிக்கின.

சாலைகளைச் சரிசெய்து போக்குவரத்தைச் சீரமைக்கும் வேலையில் அமெரிக்க அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

விபத்தில் சிலர் காயமடைந்ததாக மிச்சிகன் மாநில காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக எந்தச் சம்பவமும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

மாநிலங்களை ஒன்றிணைக்கும் முக்கிய சாலையான I-196 சாலையில் கனரக வாகனங்களும் கார்களும் விபத்தில் சிக்கின. இதனால் பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன.

அந்தச் சம்பவத்தில் 30 முதல் 40 கனரக வாகனங்கள் சிக்கிக்கொண்டன. இதனால் I-196 சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் சாலை மூடப்பட்டது.

வெப்பநிலை -22 டிகிரி செல்சியஸ் வரை செல்லக்கூடும் என்பதால் வாகன ஓட்டுநர்கள் கவனமாகச் செயல்படுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

அடுத்த சில நாள்களிலும் வானிலை மோசமாக இருக்கும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். முடிந்தால் சாலைப் பயணங்களைத் தவிர்க்குமாறும் அவர்கள் அறிவுறுத்தினர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்