சுரபாயா: இந்தோனீசியாவில் தீவிரமடைந்து வரும் காட்டுத்தீ காரணமாக பொந்தியானாக் நகரில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 11) தொடர்ந்து இரண்டாவது நாளாக மூடப்பட்டன.
நீண்ட வறட்சிக் காலம் தீவிரமடைந்து வரும் நிலையில், காற்றின் தரம் சீராகும் வரை மாணவர்கள் வீட்டிலிருந்தே பாடம் கற்க வேண்டும் என்று நகர மேயர் எடி ருஸ்டி கம்தோனோ அறிவித்தார்.
இரவிலும் காலையிலும் பொந்தியானாக் நகரைப் புகைமூட்டம் முழுமையாக மூடியுள்ளதாக திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஜாவா தீவில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலமான புரோமோ தெங்கர் செமேரு தேசியப் பூங்காவில் எரியும் பெருந்தீயைக் கட்டுப்படுத்த ஒன்பதாவது நாளாக தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
ஆகஸ்ட் 3ஆம் தேதி மூண்ட காட்டுத்தீயில் 900 ஹெக்டர் நிலப்பரப்பு சாம்பலாகியுள்ளது. இது பூங்காவின் மொத்த பரப்பளவில் கிட்டத்தட்ட 2 விழுக்காடும் 1,200க்கும் மேற்பட்ட காற்பந்துத் திடல்களின் அளவிற்கு இணையானதுமாகும். ஆகஸ்ட் 8 முதல் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ள அப்பூங்காவில் எரியும் தீயை முற்றிலும் அணைக்க கிட்டத்தட்ட 200 தீயணைப்பாளர்கள், வனப்பகுதி ஊழியர்கள், காவல்துறையினர், ராணுவத்தினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக நீர் தெளிக்கும் மூன்று ஹெலிகாப்டர்களும் தீயணைப்பு வாகனங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
நாடு முழுவதிலும் பரவிவரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த ஆறு மாநிலங்களில் 48,000க்கும் அதிகமான வீரர்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகத் தேசியப் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்தது.
மேலும், மேகங்களில் வேதிப்பொருள்களைத் தூவிச் செயற்கை மழை பொழிய வைப்பதற்காக 43 ஹெலிகாப்டர்களும் 15 விமானங்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாகப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜமாரி சானியாகோ கூறினார்.
எல் நினோ நிகழ்வின் தாக்கத்தால் 2026ல் கடுமையான வறட்சியையும் காட்டுத்தீ அபாயத்தையும் இந்தோனீசியா சந்திக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இவ்வாண்டில் இதுவரை 107,000 ஹெக்டருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீப்பற்றி எரிந்துள்ளது. இருப்பினும், நாட்டின் உணவுப் பங்கிருப்பு போதுமான அளவில் இருப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
கடந்த ஜூலையின் சராசரி வெப்பநிலை 27 டிகிரி செல்சியசாகப் பதிவானது. இது, 1991க்குப் பிறகு ஜூலையில் பதிவான ஆக அதிக சராசரி வெப்பநிலையாகும்.


