ஃபிஜியில் பாலியல் வன்கொடுமை: சந்தேகப் பேர்வழி விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலை

1 mins read
fc8df6ac-6baa-4f83-b771-2d00bdb0c520
ஆஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து புறப்படும் ‘வெர்ஜின் ஆஸ்திரேலியா’ விமானம். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: புத்தாண்டு தினத்தன்று ‘வெர்ஜின் ஆஸ்திரேலியா’வின் 21 வயது விமானச் சிப்பந்தியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆடவர் ஒருவர்மீது ஃபிஜி அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அந்தச் சந்தேகப் பேர்வழி திங்கட்கிழமை (ஜனவரி 6) நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்று தற்காலிகக் காவல்துறை ஆணையர் ஜூக்கி ஃபொங் சியூ மின்னஞ்சல் ஒன்றில் தெரிவித்தார்.

அந்தச் சந்தேகப் பேர்வழி கடந்த புதன்கிழமையிலிருந்து தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தொடர்புகொண்டபோது, ‘வெர்ஜின் ஆஸ்திரேலியா’ கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

சுற்றுப்பயணிகள் அதிகம் செல்லும் இடமான ‘நாடி’ எனும் நகரில், ஜனவரி 1ஆம் தேதி ‘வெர்ஜின் ஆஸ்திரேலியா’ ஊழியர்கள் சம்பந்தப்பட்ட வெவ்வேறு சம்பவங்களை காவல்துறை விசாரிப்பதாக முன்னதாக ஃபிஜி கூறியது.

அந்த விமான நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு விமானச் சிப்பந்திகள் சம்பந்தப்பட்ட சம்பவங்களில் கவனம் செலுத்தப்பட்டது. அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதாகவும் அவர்களிடமிருந்து திருடப்பட்டதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

விமானச் சிப்பந்திகளை காவல்துறை தடுத்து வைக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், அவர்கள் ஹோட்டலிலேயே தங்கியிருக்கும்படி அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்