பிரிஸ்பன்: ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடலோரப் பகுதியில் ஆடவர் ஒருவரைச் சுறாமீன் தாக்கியதை அடுத்து, அவர் அவசர மருத்துவ விமானம் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
குவீன்ஸ்லாந்து மாநிலத்தின் பிரிஸ்பன் நகரக் கடலோரப் பகுதிக்கு 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மோர்டன் தீவு.
புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அங்கு உள்ள ஒரு கடற்கரைப் பகுதியில் சுறாமீன் தாக்குதல் நிகழ்ந்தது குறித்து சனிக்கிழமை (பிப்ரவரி 22) பிற்பகல் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் குவீன்ஸ்லாந்து அவசர மருத்துவ வாகனச் சேவைப் பிரிவு தெரிவித்தது.
வயிற்றிலும் காலிலும் காயமடைந்திருந்த அந்த 29 வயது ஆடவர் பின்னர் ஹெலிகாப்டர் மூலம் பிரிஸ்பன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
நடப்பு கோடைக்காலத்தில், குவீன்ஸ்லாந்து கடற்கரைப் பகுதியில் சுறாமீன் தாக்குதல் நிகழ்ந்திருப்பது இது நான்காவது முறை.