சிட்னியில் சுறா மீன் தாக்கி ஆடவர் மரணம்

1 mins read
7945a5e0-32e0-434a-8817-9a8230de97ce
பெரிய வெள்ளை சுறாக்கள் ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கடற்கரையில் சுற்றித் திரிவதாக அறியப்படுகிறது. - படம்: அன்ஸ்ப்ளாஷ்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் தெற்குப் பகுதியில் இருக்கும் கடற்கரையில் சுறா மீன் தாக்கி 15 வயது இளையர் ஒருவர் உயி­ரி­ழந்­தார்.

கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 28ஆம் தேதி) பிற்பகல் யோர்க் தீபகற்பத்தில் உள்ள எதெல் கடற்கரைக்கு அருகில் அவர் நீர்ச்­ச­றுக்­கில் ஈடு­பட்டிருந்தபோது சுறா மீன் ஒன்று அவரைத் தாக்கியதாக அம்மாநில காவல்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

“துரதிர்ஷ்டவசமாக, அந்த இளையரின் உடலை மட்டுமே எங்களால் மீட்க முடிந்தது,” என அது மேலும் கூறியது.

தெற்கு அடிலெய்ட் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த அந்த இளையர் குறித்து வேறு எந்த விவரங்களையும் அம்மாநிலக் காவல்துறை தெரிவிக்கவில்லை.

அந்த இளையரின் காலை சுறா கடித்தது எனவும் அவருக்கு உதவி செய்ய மற்றொரு நீர்ச்­ச­றுக்­கு வீரர் முற்பட்டார் எனவும் இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்ததாக ‘அட்வர்டைசர்’ நாளிதழ் தெரிவித்தது.

அந்த நீர்ச்சறுக்கு வீரர் தண்ணீரிலிருந்து அந்த இளையரை வெளியே இழுத்தபோது சுறா அவர்களைச் சுற்றிக்கொண்டிருந்தது என அவர் தெரிவித்ததாக அது மேலும் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்