ஐபோன் முதன்முதலாக 2007ஆம் ஆண்டு சந்தைக்கு வந்தது. அப்போது அதனை வாங்க பலரும் ஆசைப்பட்டனர்.
அப்போது, அமெரிக்காவைச் சேர்ந்த கேரன் கீரினுக்கு ஐபோன் அன்பளிப்பாகக் கிடைத்தது. அதனைத் திறந்துகூடப் பார்க்காமல் அப்படியே அலமாரிக்குள் வைத்த அவர், பின்னர் அதனை மறந்தே போய்விட்டார்.
அதன் பின்னர் ஆண்டுக்கு ஒரு புதிய ஐபோன் சந்தைக்கு வர கெரன் தமது முதல் ஐபோனை முற்றிலும் மறந்தார்.
இந்நிலையில், அண்மையில் அந்த ஐபோன் குறித்து கேரனுக்கு நினைவுக்கு வர, அதனை அவர் ஏலத்தில் விற்க முடிவெடுத்தார்.
இறுதியில், அந்த 8 ஜிபி ஐபோன் கிட்டத்தட்ட 85,000 வெள்ளிக்கு ஏலத்தில் விலைபோனது.
அதாவது, அதன் உண்மையான விலையைக் காட்டிலும் 100 மடங்கிற்குமேல் விலைபோனது.
தம்மிடம் ஏற்கெனவே சில கைப்பேசிகள் இருந்ததால் ஐபோன் பற்றிய நினைப்பே இல்லை என்றும் ஐபோனின் மதிப்பு என்றும் குறையாது என்பதால் அதனைப் பயன்படுத்தவில்லை என்றும் கேரன் குறிப்பிட்டார்.
அண்மையில் பழைய ஐபோன் அதிக விலைக்கு விற்ற செய்திகளை இணையத்தில் படித்ததால் தனது கைப்பேசியை விற்க முடிவு செய்ததாகவும் அவர் சொன்னார்.
அந்த ஐபோன் 50,000 வெள்ளிக்கு ஏலம் போகலாம் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அதன்மூலம் 85,000 வெள்ளி கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார் கேரன்.