புதுடெல்லி: பங்ளாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தமது அவாமி லீக் கட்சி மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தமக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்படும் சாத்தியம் இருந்தாலும் அல்லது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டாலும், வரும் டிசம்பர் மாதத்துக்குள் தாயகம் திரும்புவதில் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் உள்ள தெற்காசிய வெளிநாட்டுச் செய்தியாளர்கள் மன்றம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் காணொளிக்குப் பதிலாக, ஒலிப்பதிவுச் செய்தி வடிவில் அவர் உரையாற்றினார்.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து பதவியிழந்த திருவாட்டி ஹசீனா, அந்நாட்டை விட்டு வெளியேறிய பிறகு ஊடகங்களிடம் பேசியது இதுவே முதல் முறையாகும்.
அவரது இந்த உரையாடலுக்கு பங்ளாதேஷ் வெளியுறவு அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. திருவாட்டி ஹசீனாவை ஊடகங்களுடன் பேச அனுமதித்தது பங்ளாதேஷின் இறையாண்மையை அவமதிக்கும் செயல் என்றும் இது இந்திய-பங்ளாதேஷ் இருதரப்பு உறவுகளைப் பாதிக்கும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு நவம்பரில் பங்ளாதேஷ் போர்க்குற்ற நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட திருவாட்டி ஹசீனாவைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு பங்ளாதேஷ் கோரி வருகிறது.
தாரிக் ரஹ்மான் தலைமையிலான தற்போதைய பங்ளாதேஷ் அரசாங்கம், திருவாட்டி ஹசீனாவின் உரைகளைப் பிரசுரிக்கவோ ஒளிபரப்பவோ வேண்டாம் என ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதே நிகழ்ச்சியில் அமெரிக்காவிலிருந்து காணொளி வழியே பேசிய ஹசீனாவின் மகனும் அவாமி லீக் மூத்த தலைவருமான சஜீப் வாசீத் ஜோய், பங்ளாதேஷ் தற்போது ‘தோல்வியடைந்த நாடாக’ மாறியுள்ளதாக எச்சரித்தார். மேலும், அந்நாட்டில் பயங்கரவாத அமைப்புகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் இது இந்தியாவின் கிழக்குப் பகுதிப் பாதுகாப்புக்குப் பெரிதும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், பங்ளாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷாகிப் அல் ஹசனின் வீட்டை நோக்கி கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டுகளை எறிந்தது மட்டுமல்லாமல், அவரது வீட்டுச் சன்னல்களை உடைத்ததாகக் கூறப்படுகிறது.
திருவாட்டி ஹசினா செய்தியாளர்களிடம் பேசியபோது இணையம் வழியாக ஷாகிப் அதில் கலந்கொண்டதால் பங்ளாதேஷில் உள்ள மகுரா நகரில் உள்ள ஷாகிப்பின் பூர்வீக வீடு சேதப்படுத்தப்பட்டது.
சம்பவம் நிகழ்ந்தபோது வீட்டில் யாரும் இல்லை என்றும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஷாகிப், முன்னாள் அவாமி கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருவாட்டி ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதிலிருந்து அவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
கொலை, கையாடல், மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குதல் போன்ற குற்றங்களின் பேரில் பங்ளாதேஷில் விசாரணையை அவர் எதிர்நோக்குகிறார்.


