புதுடெல்லி: பங்ளாதேஷின் இடைக்கால அரசு தேர்தல் நடத்த முடிவெடுத்தால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்புவார் என்று அவரது மகன் சஷிப் வாசித் ஜாய் தெரிவித்துள்ளார்.
திரு சஷிப் அமெரிக்காவில் உள்ளார். அவர் இந்திய ஊடகமான ‘டைம்ஸ் ஆப் இந்தியா’விடம் இந்தத் தகவலை கூறினார்.
“தமக்கு அரசியலில் ஆர்வம் இல்லை, அதனால் தான் அமெரிக்காவில் உள்ளேன். இருப்பினும் தற்போது பங்ளாதேஷில் எழுந்துள்ள நெருக்கடி தம்மை அரசியலில் ஈடுபட ஊக்குவிக்கிறது”, என்று சஷிப் தெரிவித்தார்.
இந்நிலையில், திருவாட்டி ஹசீனா தேர்தலில் போட்டியிடுவாரா என்பது குறித்து தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை.
ஹசீனாவின் கொள்கைகளுக்கு எதிராக பங்ளாதேஷில் பல நாள்களாக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதில் பலர் கொல்லப்பட்டனர். போராட்டம் தீவிரமடைந்ததால் பிரதமர் பதவியில் இருந்து ஹசீனா விலகினார்.
பங்ளாதேஷை 15 ஆண்டுகள் ஆண்ட திருவாட்டி ஹசீனா ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்தியாவுக்குத் தப்பி ஓடினார்.
அமைதிக்கான நோபெல் பரிசு பெற்ற பொருளியல் நிபுணர் முகம்மது யூனுஸ், பங்ளாதேஷில் புதிய இடைக்கால அரசாங்கத்தை ஆகஸ்டு 8 அன்று அமைத்தார். அவரது தலைமையில் பங்ளாதேஷில் விரைவில் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.