டாக்கா: பங்ளாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி அந்நாட்டின் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலைப் பங்ளாதேஷ் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும்.
அவாமி லீக் பதிவு செய்துகொள்ள முடியாதபடி அதற்கான பணிகளை ஆணையம் தற்காலிகமாகத் தடுத்துவைத்துள்ளது.
முகம்மது யூனோஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் அவாமி லீக்கின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதித்துள்ளதை அடுத்து, அக்கட்சி தேர்தலில் போட்டியிட முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவாட்டி ஷேக் ஹசினாவின் கட்சிக்கு எதிராகப் பல ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதை அடுத்து, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பங்ளாதேஷில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களின் மரணத்துக்கு அவாமி லீக் கட்சி காரணம் என்று இடைக்கால அரசாங்கம் கூறுகிறது.
தேசிய பாதுகாப்பு மிரட்டல்கள், போர்க் குற்றங்கள் தொடர்பாக அக்கட்சிக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருவதாக அது தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
இதன் காரணமாக அக்கட்சி தேர்தலில் போட்டியிட முடியாது என்று இடைக்கால அரசாங்கம் கூறியது. கடந்த ஆண்டு திருவாட்டி ஷேக் ஹசினாவுக்கு எதிராக பங்ளாதேஷின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து, அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
திருவாட்டி ஷேக் ஹசினா, 2024 ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.