ஜோகூர் பாரு: ஜோகூர் மாநில அரசாங்க ஊழியர்களுக்கு திங்கட்கிழமை, ஜனவரி 6ஆம் தேதி, கூடுதலாக ஒரு நாள் விடுமுறை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இருந்த வாரயிறுதி நாள்களை மாற்றியதால் இவ்வாறு கூடுதலாக ஒரு விடுமுறை நாள் அறிவிக்கப்பட்டுள்ளதாக த ஸ்டார் செய்தித்தாள் கூறியது.
கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து ஜோகூர் மாநிலம் வாரயிறுதி நாள்களாக வெள்ளிக்கிழமை-சனிக்கிழமைகளை அனுசரித்து வந்திருந்தது. மலேசியாவில் இதுபோல் மேலும் மூன்று மாநிலங்கள் வெள்ளிக்கிழமை-சனிக்கிழமைகளை வாரயிறுதி நாள்களாக கொண்டிருந்தன.
ஆனால், 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஜோகூர் மாநில பட்டத்து இளவரசர் மீண்டும் பழைய மாதிரியே சனிக்கிழமை-ஞாயிற்றுக்கிழமைகள் வாரயிறுதி நாள்களாக, மலேசிய கூட்டரசு அரசாங்கம், சிங்கப்பூர் ஆகியவற்றுடன் ஒத்து இருக்கும் என அறிவித்தார்.
எனினும், புத்தாண்டின் முதல் நாள் புதன்கிழமையாக இருப்பதால், ஜோகூர் மாநில அரசு ஊழியர்கள் தொடர்ச்சியாக ஆறு நாள்கள், அதாவது ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 29ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதிவரை, வேலை செய்ய வேண்டியுள்ளதால், அதற்கு ஈடுசெய்யும் விதமாக கூடுதலாக ஜனவரி 6ஆம் தேதி விடுமுறை நாளாக இருக்கும் என்று விளக்கமளிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், மலேசியாவில் ஜனவரி 6ஆம் தேதி மலேசியாவில் சிங்கப்பூரின் ஜிசிஇ சாதாரண நிலைத் தேர்வுக்கு ஈடான எஸ்பிஎம் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்பதால் பள்ளி மாணவர்களுக்கும் தேர்வை மேற்பார்வையிடும் ஆசிரியர்களுக்கும் விடுமுறை இல்லை என்று கூறப்பட்டுள்ளது.