‘கிலோப்’ குற்றக் கும்பலின் தளத்தை ஊடுருவிய ‘‌‌ஷைனிஹன்டர்ஸ்’

‘கிலோப்’ குற்றக் கும்பலின் தளத்தை ஊடுருவிய ‘‌‌ஷைனிஹன்டர்ஸ்’

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

21 Sep 2026 - 2:29 pm

2 mins read

வா‌ஷிங்டன்: உலக அளவில் பரவலாக அறியப்படும் இணையக் குற்றக் கும்பல்களில் ஒன்று, ‘டார்க் வெப்’ என்ற தளத்தில் உள்ள அதன் முக்கிய வைரியின் இணையத்தளங்களை ஊடுருவியுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) தெரிவித்துள்ளது.

அதன் மூலம், நீண்ட நாளாகப் புகைந்துகொண்டிருந்த பகையைப் பகிரங்கமாக வெளிக்கொண்டுவந்துள்ளதாக அது தெரிவித்தது.

தகவல்களைக் களவாடும் மோசமான மின்னிலக்க மிரட்டல் குழுவின் ‌‌’ஷைனிஹன்டர்ஸ்’, ‘கிலோப்’ (cl0p) என்ற இணையக் குற்றக் கும்பலின் ‘டார்க் வெப்’ இணையத்தளத்துக்குள் இம்மாதம் 18ஆம் தேதி ஊடுருவியதாகக் கூறியது.

‘கிலோப்’ கும்பலின் மென்பொருளில் உள்ள பலவீனத்தைக் கண்டறிந்து அதன் மூலம் குழுவின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பையும் வசப்படுத்திக்கொண்டதாக ‘‌‌ஷைனிஹன்டர்ஸ்’ குழு சொன்னது.

“அடிப்படையில் நாங்கள்தான் ‘கிலோப்’ குழுவுக்கு உரிமையாளர்கள்,” என்று ‘‌‌ஷைனிஹன்டர்ஸ்’ ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துடன் மேற்கொண்ட இணையவழி உரையாடலில் குறிப்பிட்டது.

ராய்ட்டர்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக அனுப்பிய செய்திகளுக்குக் ‘கிலோப்’ குழு பதிலளிக்கவில்லை. இம்மாதம் 20ஆம் தேதி குழுவின் இணையத்தளமும் செயல்படவில்லை.

இரு குற்றக் கும்பல்களுக்கும் இடையே மூண்ட மோதல் உண்மையானது என்று இரண்டு இணையப் பாதுகாப்பு வல்லுநர்கள் ராய்ட்டர்சுடன் பகிர்ந்துகொண்டனர்.

எந்தவொரு இணையக் குற்றக் கும்பலும் மற்றொரு குற்றக் கும்பலின் இணையத்தளத்தை வெளிப்படையாக ஊடுருவிப் பார்த்ததில்லை என்றார் ஸ்பைகிளாவுட் நிறுவனத்தின் மூத்த இயக்குநர் ஜோ ரூசென்.

“குற்றவாளிகள் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொள்வதைப் பார்ப்பது மிகவும் அரிது,” என்றார் அவர்.

2025ஆம் ஆண்டு, ஆரக்கல் நிறுவனத்தின் மின் வர்த்தகத் தளத்தில் அறியப்படாத ஒரு பாதுகாப்பு குறைபாட்டைப் பயன்படுத்தி மென்பொருளைக் களவாடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ‘கிலோப்’ கும்பலுக்கும் ‘‌‌ஷைனிஹன்டர்ஸ்’ கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

ர‌ஷ்ய மொழி பேசும் குற்றக் கும்பலான ‘கிலோப்’, மின் வர்த்தகத் தளத்தில் உள்ள பலவீனத்தைப் பயன்படுத்தி 100க்கும் அதிகமான நிறுவனங்களின் தரவுகளைக் களவாடியது.

குறிப்புச் சொற்கள்
குற்றம்ஊடுருவல்இணையத்தளம்