தைவானின் ஆகப்பெரிய கப்பல் நிறுவனமான எவர்கிரீன் மரீனில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரையாண்டு போனசாக 10 முதல் 11 மாதச் சம்பளம் வழங்கப்படுவதாக தைவானின் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த ஜனவரியில், ஊழியர்களுக்கு அந்நிறுவனம் 52 மாதங்கள் வரை போனஸ் வழங்கியிருந்தது.
அரையாண்டு போனஸ் வழங்குவதற்காக எவர்கிரீன் மரீன் NT$1.918 பில்லியன் (S$84 மில்லியன்) செலவழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 14ஆம் தேதி நடைபெற்ற இயக்குநர் சபைக் கூட்டத்தின்போது இந்த அறிவிப்பு வெளியானது.
எவர்கிரீன் மரீனில் ஏறக்குறைய 3,100 ஊழியர்கள் வேலை செய்வதாகவும் அவர்களது சராசரி மாதச் சம்பளம் NT$60,000 (S$2,633) என்று சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி குறிப்பிட்டது.
ஜனவரியில் வழங்கப்பட்ட போனசையும் எதிர்வரும் அரையாண்டு போனசையும் சேர்த்தால், எவர்கிரீன் மரீன் ஊழியர்கள் 60 மாதச் சம்பளம் வரை எதிர்பார்க்கலாம்.
கடந்த ஆண்டு எவர்கிரீன் மரீனின் வருவாய் NT$627.284 பில்லியனாக (S$27.53 பி.) இருந்தது என நிதியறிக்கை ஒன்றை சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி சுட்டியது. 2019ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க, இது 28.17 விழுக்காடு அதிகம்.
கடந்த ஆண்டு, எவர்கிரீன் மரீனின் வரலாற்றிலேயே மிகச் சிறந்த ஆண்டாக இருந்தது என யுனைடெட் டெய்லி நியூஸ் செய்தித்தளம் குறிப்பிட்டது.
இவ்வாண்டின் முதலிரு மாதங்களில் அதன் வருவாய் NT$44.922 பில்லியன் (S$2 பி.) எனக் கூறப்பட்டது. இது, 59.94 விழுக்காடு சரிவாகும்.
எவர்கிரீன் மரீன் கையாண்ட சரக்குகளின் எண்ணிக்கை குறைந்ததற்கு, கொவிட்-19 பெருந்தொற்றையும் சீனப் புத்தாண்டு விடுமுறையையும் காரணங்களாக சுட்டினார் நிறுவனத்தின் தலைவர் சியே ஹுவெய் சுவான்.
ஆனால், இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் வர்த்தக நிலவரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, எவர்கிரீன் மரீன் அதன் ஊழியர்களுக்கு மிகவும் தாராளமாக போனஸ் வழங்குவது குறித்த செய்தி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. எவர்கிரீன் மரீன் ஊழியர்கள் மீது தாங்கள் பொறாமை கொள்வதாக தைவானில் உள்ள ஃபேஸ்புக் பயனாளர்கள் பலரும் கருத்துரைத்தனர்.