சோல்: ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து கடுமையாகச் சரிந்து வருகிறது.
வியாழக்கிழமை (செப்டம்பர் 10) 7ஆகக் குறைந்துள்ளது. அதற்கு முந்தைய நாள் அது 11 ஆக இருந்தது.
10 நாள் சராசரியான 15ஐ விட இது மிகவும் குறைவாகும் என்று கப்பல் கண்காணிப்பு நிறுவனமான கெப்ளர் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 28ஆம் தேதிக்கு முன்னர், அதாவது ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு, ஹோர்முஸ் நீரிணையில் நாள்தோறும் கிட்டத்தட்ட 125 வணிகக் கப்பல்கள் வந்துசெல்லும்.
மத்திய கிழக்கு நிலவரம், ஹோர்முஸ் நீரிணையில் தடையில்லா கப்பல் போக்குவரத்து ஆகியவை குறித்துத் தென்கொரிய வெளியுறவு அமைச்சர் சோ ஹியூன், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியுடன் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) தொலைபேசி வழி ஆலோசனை நடத்தினார்.
இந்த விவகாரம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த திரு சோ, வட்டாரத்தில் நிலைத்தன்மையும் அமைதியும் திரும்பும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
அனைத்துக் கப்பல்களுக்கும் தடையற்ற, பாதுகாப்பான போக்குவரத்தைத் தென்கொரியா தொடர்ந்து ஆதரித்து வருவதாக அவர் கூறினார்.
ஈரானின் நிலைப்பாட்டை அராக்சியும் விளக்கினார். தொடர்ந்து இருதரப்பும் தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டன.
மத்திய கிழக்குக்குப் படைகளை அனுப்புவதா என்பதை மதிப்பிடத் தென்கொரியா ஓர் ஆய்வுக்குழுவை அனுப்பியதையடுத்து, ஈரானின் கோரிக்கையின் பேரில் இந்தத் தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டது.
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை ஆதரிக்க ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்ட பல தெரிவுகளைப் பரிசீலிப்பதாகத் தென் கொரியா கடந்த வாரம் கூறியது.
ஈரான் போரின்போது அமெரிக்காவின் முயற்சிகளில் இணையாததற்காகத் தென் கொரியாவை விமர்சித்த அதிபர் டோனல்ட் டிரம்ப், கடந்த ஆகஸ்ட் மாதம் இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சிகளைக் குறைத்தார்.
இதற்கிடையே, வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் தென்கொரிய ராணுவத்தின் எந்தவொரு தலையீடும் அமெரிக்காவின் அத்துமீறலுக்கு அளிக்கும் ஆதரவாகக் கருதப்பட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஈரான் எச்சரித்துள்ளது.

