புத்ராஜெயா: மலேசியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் ஊழல் மூலம் 277 பில்லியன் ரிங்கிட் (S$79 பில்லியன்) இழப்பு ஏற்பட்டுள்ளதற்கு அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
“ஊழலை நாம் எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அப்பிரச்சினை பல பில்லியன்களையும் தாண்டி, பல மடங்கு பெரிதாகியுள்ளது,” என்று திரு அன்வார் குறிப்பிட்டார்.
புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் செவ்வாய்க்கிழமை (மே 7) ‘தேசிய ஊழல் தடுப்பு உத்திகள் 2024-2028’ நிகழ்வைத் தொடங்கி வைத்துப் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த 1961, 1962ஆம் ஆண்டுகளில் முன்னாள் பிரதமர் அப்துல் ரசாக் ஹுசைன் ஊழலுக்கு எதிராக எழுப்பிய எச்சரிக்கைக் குரல்கள் செவிமடுக்கப்படாமலேயே போய்விட்டதாகவும் திரு அன்வார் குறிப்பிட்டார்.
ஊழல் செய்யப்படாமல் இருந்திருந்தால் அப்பணத்தைக் கொண்டு வளர்ச்சி சார்ந்த பல்வேறு பிரச்சினைகளைக் களைய, குறிப்பாக வறுமையை ஒழிக்க முடிந்திருக்கும் என்றார் அவர்.
வலுவான அரசியல் துணிவும் தெளிவான பாதையும் இல்லாவிடில், ஊழலைத் தடுக்க எத்தனை திட்டங்களையும் உத்திகளையும் வகுத்தாலும் பயனில்லாமல் போகும் என்பதையும் பிரதமர் அன்வார் ஒத்துக்கொண்டார்.
முன்னதாக, தமது வரவேற்புரையின்போது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி, கடந்த 2018 - 2023 காலகட்டத்தில் ஊழல் மூலம் 277 பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதே நேரத்தில், உலகளாவிய ஊழல் கண்ணோட்டக் குறியீட்டில் மலேசியாவின் நிலை மேம்பட்டுள்ளதற்கு தேசிய ஊழல் தடுப்புத் திட்டம் 2019-2023 அறிமுகப்படுத்தப்பட்டதும் ஒரு காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டிற்கான அப்பட்டியலில், மொத்தம் 180 நாடுகளில் மலேசியா 57ஆம் இடத்தைப் பிடித்தது. முந்திய பட்டியலில் அது 61ஆம் இடத்திலிருந்தது.
அடுத்த பத்தாண்டுகளுக்குள் பட்டியலின் முதல் 25 இடங்களுக்குள் வருவதற்கு மலேசியா இலக்கு கொண்டுள்ளதாகவும் திரு அசாம் சொன்னார்.