கிராட்ஸ்: ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் கிராட்ஸ் நகரிலுள்ள பள்ளி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் மாண்டுபோனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூட்டுச் சத்தம் கேட்டதையடுத்து அப்பள்ளியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் பத்துப் பேர் இறந்துவிட்டதாக கிராட்ஸ் நகர மேயர் எல்கே கார் தெரிவித்துள்ளார். மாண்டவர்களில் மாணவர்களும் துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் அடங்குவர் என்றும் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் உயிரிழந்தவர்களில் ஒருவர் என்று உள்துறை அமைச்சைச் சுட்டி, ஓஆர்எஃப் ஒலிபரப்பு நிறுவனம் குறிப்பிட்டது. பள்ளி மாணவர் ஒருவரே அந்த வன்முறைச் செயலில் இறங்கியதாகவும் பின்னர் அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்துபோனதாகவும் அச்செய்தி கூறியது.
அந்த உயர்நிலைப் பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு குறித்து காலை 10 மணியளவில் தகவல் கிடைத்ததை அடுத்து சிறப்புப் படையினர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஹெலிகாப்டர் மூலமாகவும் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இப்போது அப்பள்ளி தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வந்துவிட்டது என்றும் இனி அபாயம் இல்லை என்றும் காவல்துறை தெரிவித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரியாவின் இரண்டாவது பெரிய நகரான கிராட்சில் ஏறக்குறைய 300,000 பேர் வாழ்கின்றனர்.