தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே துப்பாக்கிச்சூடு

2 mins read
0b6f97df-8116-418b-a15f-bbeacb20dfe0
தலிபான் போராளிகள் மூன்று பாகிஸ்தானியச் சோதனைச்சாவடிகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே சண்டை மூண்டுள்ளது.

சனிக்கிழமை (அக்டோபர் 11) இருநாடுகளுக்கு இடையிலான எல்லைகளில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 58 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாரத் தொடக்கத்தில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை வான்வழியாகத் தாக்கியது. பாகிஸ்தான் தரப்பு தலிபான் அமைப்பு தலைவரைக் குறிவைத்து அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதற்குப் பதிலடி தரும் விதமாகத் தற்போது தலிபான்கள் பாகிஸ்தான் எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளைத் தாக்கத் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே தலிபான்களின் தாக்குதலுக்கு முழுவீச்சில் பதிலடி கொடுத்து வருவதாகப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மொத்தம் ஆறு இடங்களில் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது.

தலிபான் போராளிகள் 10க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியச் சோதனைச்சாவடிகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள சில சோதனைச்சாவடிகளை பாகிஸ்தான் அழித்துவிட்டதாக இஸ்லாமாபாத் கூறியுள்ளது.

இரவு நேரம் நடந்த தாக்குதல் தொடர்பான காணொளிகளும் வெளியாகியுள்ளன. அதில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானை நோக்கி ஏவுகணைகளை அனுப்புவதைப் பார்க்க முடிந்தது.

“பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் வான் எல்லைக்குள் அத்துமீறி நடந்து கொண்டது. அதனால் தான் பதிலடி கொடுக்கிறோம், என்று ஆப்கானிஸ்தானின் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

இரு தரப்புக்கும் இடையிலான தாக்குதல் நள்ளிரவுடன் முடிந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் மீண்டும் ஆப்கானிஸ்தான் வான் எல்லைக்குள் புகுந்தால் கடுமையான பதிலடியை எதிர்நோக்கும். தலிபானின் ஆயுதப் படைகள் தயார் நிலையில் உள்ளன என்று பேச்சாளர் கூறினார்.

சண்டை முடிவுகுறித்து பாகிஸ்தான் அதிகாரபூர்வத் தகவல்களை வெளியிடவில்லை. பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லை 2,600 கிலோமீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலிபான்களுக்கு இந்தியா உதவுவதாகப் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது. இதை இந்தியா மறுத்துள்ளது. அதேபோல் தலிபான்களும் தங்களது உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டுத் தலையீடுகள் இருக்காது என்று தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்