இங்கிலாந்துக் காற்பந்துக் குழுவின் பயிற்சி முகாம் அருகில் துப்பாக்கிச்சூடு; ஒன்பது பேர் காயம்

இங்கிலாந்துக் காற்பந்துக் குழுவின் பயிற்சி முகாம் அருகில் துப்பாக்கிச்சூடு; ஒன்பது பேர் காயம்

1 mins read
67c83d12-6c68-4047-a9d4-871cfdf790a5
இங்கிலாந்துக் காற்பந்துக் குழு தனது உலகக் கிண்ணப் போட்டிக்கான பயிற்சிகளை மேற்கொள்வதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த ‘ஸ்வோப் சாக்கர் வில்லேஜ்’ பயிற்சி முகாமிலிருந்து ஏறத்தாழ 6.4 கிலோமீட்டர் தொலைவில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது. - படம்: ஸ்வோப் சாக்கர் வில்லேஜ்/ஃபேஸ்புக்

கேன்சஸ் சிட்டி: உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி தொடங்க இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில் உள்ள கேன்சஸ் சிட்டியில் சனிக்கிழமையன்று (ஜூன் 6) நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒன்பது பேர் காயமடைந்தனர்.

இங்கிலாந்துக் காற்பந்துக் குழு தனது உலகக் கிண்ணப் போட்டிக்கான பயிற்சிகளை மேற்கொள்வதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த ‘ஸ்வோப் சாக்கர் வில்லேஜ்’ பயிற்சி முகாமிலிருந்து ஏறத்தாழ 6.4 கிலோமீட்டர் தொலைவில் இந்தத் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்துள்ளது.

காயமடைந்தவர்களில் மூவர் உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் யாருக்கும் உயிருக்கு ஆபத்தான காயம் ஏற்படவில்லை என்றும் கேன்சஸ் சிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இங்கிலாந்துக் காற்பந்துக் குழுவினர் இன்னும் கேன்சஸ் சிட்டிக்கு வந்து சேரவில்லை என்றும் புதன்கிழமையன்று (ஜூன் 10) ஃபுளோரிடாவின் ஓர்லாண்டோவில் நடைபெறும் நட்புமுறை ஆட்டம் ஒன்றில் அவர்கள் விளையாடவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூடு குறித்து கருத்து தெரிவிக்க இங்கிலாந்துக் காற்பந்துச் சங்கம் மறுத்துவிட்டது.

குறிப்புச் சொற்கள்