நியூயார்க்கில் துப்பாக்கிக்ச்சூடு; சிறார் உட்பட சிலர் காயம்

நியூயார்க்கில் துப்பாக்கிக்ச்சூடு; சிறார் உட்பட சிலர் காயம்

1 mins read
07c1b459-ff34-48ef-a518-e381b5bf91f4
அமெரிக்காவின் நியூயார்க் நகரம். - படம்: சிட்லி

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிறார் உட்பட சிலர் காயமுற்றதாக அந்நகரின் காவல்துறையை மேற்கோள்காட்டி ஏபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தேசிய தினமான சனிக்கிழமை (ஜூலை 4) நியூயார்க் நகரின் கோனி ஐலண்ட் பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் குறைந்தது எட்டுப் பேர் காயமுற்றனர். அவர்களில் நால்வர் சிறார் என்று ஏபிசி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) தெரிவித்தது.

உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 10.37 மணிக்கு புரூக்ளின் குடியிருப்புப் பகுதியின் 31வது ஸ்திரீட்டில் துப்பாக்கிச்சூடு நடந்ததாகத் தகவல் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தாங்கள் நடவடிக்கை எடுத்ததாக நியூயார்க் காவல்துறை அறிக்கை மூலம் ஏபிசியிடம் தெரிவித்தது.

காயமடைந்த எட்டுப் பேரில் இருவர் ஆண்கள், இருவர் பெண்கள், நால்வர் சிறார் என்று ஏபிசி குறிப்பிட்டது. அந்தச் சிறார் ஆறிலிருந்து 14 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அது தெரிவித்தது.

காயமுற்ற அனைவரும் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாக நியூயார்க் காவல்துறை கூறியது என்று ஏபிசி சொன்னது. அவர்களில் எழுவரின் நிலை சீராக இருப்பதாகவும் 21 வயது பெண் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆகக் கடைசி நிலவரப்படி காவல்துறை, சம்பவ இடத்தில் ஒரு துப்பாக்கியைக் கண்டெடுத்ததாகவும் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்