வாஷிங்டன்: வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் இரவு விருந்து நிகழ்ச்சியில் திடீரென பலத்த சத்தம் கேட்டதைத் தொடர்ந்து அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் அவரது மனைவி மெலேனியாவும் ரகசிய சேவை அதிகாரிகளால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
சனிக்கிழமை இரவு (ஏப்ரல் 25) விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கிருந்து வெளியேறிய ஒரு மணி நேரத்திற்குப் பிறகு “துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டார்,” என்று ட்ருத் சமூக ஊடகத்தில் டிரம்ப் பதிவிட்டார்.
ரகசிய சேவை, சட்ட அமலாக்க அதிகாரிகள் அற்புதமான வேலையைச் செய்துள்ளனர் என்று அவர் பாராட்டியிருந்தார்.
முன்னதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட ஓர் அறிக்கையில் டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்ப்டடது.
விருந்து நிகழ்ச்சியில் நான்கு முதல் ஆறு வெடிச் சத்தம் கேட்டதைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு துப்பாக்கி ஏந்திய ஒரு நபர் இருந்ததாக சில ஊடகங்கள் தெரிவித்தன.
விருந்தில் பங்கேற்றவர்கள் உடனடியாக பேச்சை நிறுத்திவிட்டு கீழே படுங்கள், கீழே படுங்கள் என்று சத்தம் போட்டனர்.
ரகசிய சேவை அதிகாரிகள் அவசரமாக உள்ளே நுழைந்தபோது நூற்றுக்கணக்கானவர்கள் மேசைக்கு அடியிலும் நாற்காலியிலும் படுத்திருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அவர்கள் அனைவரையும் அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
ஏறக்குறைய 2,600 விருந்தினர்கள் மேசைக்கு அடியிலும் மறைவான இடத்திலும் பதுங்கியிருந்தனர். உணவு பரிமாறும் ஊழியர்கள் உணவுக் கூடத்தின் முன்பகுதிக்கு ஓடிச் சென்று ஒளிந்துகொண்டனர்.
இந்த நிலையில் காவல்துறை விருந்து நிகழ்ச்சி நடைபெற்ற வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலை சுற்றி வளைத்தது. ஹெலிகாப்டர் ஒன்று மேலே வட்டமிட்டது.
திருமதி மெலேனியா மேடையிலிருந்து பாதுகாப்பாக ரகசிய அதிகாரிகளால் வெளியேற்றப்படுவதற்கு சற்று முன்பு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதைக் கண்டு அவரது முகம் மாறியது. அவர் கவலையடைந்து காணப்பட்டதாக சிஎஸ்பிஏஎன் நேரலை ஒளிபரப்பு கூறியது.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிபர் டிரம்ப், குண்டு துளைக்காத கவச உடையணிந்து பல ஆயுதங்களுடன் இருந்த சந்தேக நபர் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்து ஒரு சட்ட அமலாக்க அதிகாரியை காயப்படுத்தியிருக்கிறார் என்றார்.
“கொலை செய்ய அஞ்சாத அந்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

