அமெரிக்காவின் சியேட்டல் நகரில் துப்பாக்கிச்சூடு; இருவர் மரணம்

அமெரிக்காவின் சியேட்டல் நகரில் துப்பாக்கிச்சூடு; இருவர் மரணம்

1 mins read
da0c30ab-caf1-4222-a5a1-c014e88b3da2
துப்பாக்கிச்சூடு நடந்த சியேட்டல் சென்டரில் பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

சியேட்டல்: அமெரிக்காவின் சியேட்டல் நகரில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர். இரண்டு வயதுச் சிறுவன் உட்பட ஐவர் காயமடைந்தனர்.

சியேட்டல் சென்டரில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘பைட் ஆஃப் சியேட்டல்’ உணவுத் திருவிழாவின்போது, உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் அங்கிருந்த ஆயிரக்கணக்கானோர் அலறியடித்துக்கொண்டு நாலாப்புறமும் சிதறி ஓடினர்.

சம்பவ இடத்தில் இருவர் உயிரிழந்ததாக சியேட்டல் தீயணைப்புத் துறையினர் உறுதிப்படுத்தினர். காயமடைந்த ஐவரும் உடனடியாக ஹார்பர்வியூ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 56 வயதுப் பெண் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு வயதுச் சிறுவன், 23 வயது இளையர், 39 வயதுப் பெண் ஆகியோர் சீரான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றொருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியை மக்கள் தவிர்க்குமாறு சியேட்டல் காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர். காவல்துறையினருக்குத் துணையாகச் சிறப்பு அதிரடிப்படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தமது இரங்கலைத் தெரிவிப்பதாக மாநில ஆளுநர் கூறியுள்ளார். ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கவரும் இந்த உணவுத் திருவிழாவில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபரைக் கண்டுபிடிக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்
துப்பாக்கிச்சூடுஅமெரிக்காகாவல்துறை