தென்னாப்பிரிக்க விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு; 11 பேர் மரணம்

தென்னாப்பிரிக்க விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு; 11 பேர் மரணம்

படம்: ராய்ட்டர்ஸ்

23 Sep 2026 - 7:50 pm

1 mins read

ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்க நகரமான டர்பனுக்குத் தெற்கே உள்ள ஒரு நகரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) இரவு விருந்து நடந்த ஒரு வீட்டை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 11 பேர் உயிரிழந்தனர், மூவர் காயமடைந்தனர்.

ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று அந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியது. அந்தக் கும்பலில் மூவர் இருந்ததாகவும் அது கும்பல்களின் மோதல் தொடர்புடைய சம்பவமாக இருக்கலாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

கர்ப்பிணி என நம்பப்படும் ஒரு பெண்ணும் 13 ஆண்களும் குவாசுலு- நடால் மாகாணத்தில் உள்ள குவாமாகுதா நகரப் பகுதியில் நடந்த விருந்தில் கலந்துகொண்டதாக, காவல்துறை புதன்கிழமை (செப்டம்பர் 23) தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டது.

“அந்தப் பெண் உட்பட பத்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நால்வர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்தார்,” என்றும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, ஆனால் போட்டிப் பிரிவினருக்கு இடையேயான மோதலை நிராகரிக்க முடியாது என்று காவல்துறை கூறியுள்ளது. சந்தேக நபரான மூவரைத் தேடும் பணியைக் காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் சிலர் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகக் குற்றப்பிரிவுப் புலனாய்வுத் துறையின் கண்காணிப்பில் இருந்தவர்கள் என்று கூறிய காவல்துறை அதுகுறித்த மேல்விவரங்களைத் தெரிவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்