பேங்காக்: தாய்லாந்தின் தலைநகருக்கு அருகில் உள்ள உள்ளூர் அரசாங்க அலுவலக அதிகாரிமீது துப்பாக்கிச்சூடு நடத்திய ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மூத்த மாநில அதிகாரி, அவரின் ஓட்டுநர் ஆகியோர்மீது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக நம்பப்படுகிறது என்று நந்தபுரி மாநிலக் காவல்துறை ஆணையர் மேஜர் ஜெனரல் டெஜ்ரபீ கொங்டீ கூறினார்.
சம்பவத்தின்போது காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டார்.
ஆக அண்மையில் பள்ளிக்கூடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிலிருந்து தாய்லாந்து முழுமையாக மீண்டுவருவதற்குள் மற்றொரு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது அச்சத்தைக் கிளப்பியுள்ளது.
டெப்சிரின் நந்தபுரி பள்ளியில் 14 வயதுச் சிறுவன் ஆகஸ்ட் 7ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒன்பது பேர் மாண்டதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வீட்டில் இருந்த தாத்தா, பாட்டியையும் துப்பாக்கியால் சுட்டப்பின் பள்ளிக்குச் சென்ற சிறுவன், பின்னர் தம்மையே சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டான்.
தாய்லாந்துப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்குல் துப்பாக்கி விற்பனையைக் கட்டுப்படுத்த முற்பட்டுள்ள நிலையில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) தாய்லாந்து மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பினர்.
அவர்களிடம் துப்பாக்கிகள் இருக்கின்றவா என்பதைக் கண்டறியும் சோதனைகளும் பிற சோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கிடையே, தாய்லாந்தின் கல்வியமைச்சு பள்ளிகளுக்கான புதிய பாதுகாப்பு விதிமுறைகளை அடுத்த மூன்று மாதங்களில் உருவாக்கும் என்று தெரிவித்தது.
அவற்றுள் மனநலப் பாதுகாப்புச் சோதனைகளும் நெருக்கடிக் காலப் பயிற்சிகளும் அடங்கும்.
காவல்துறை அதிகாரிகளும் பொதுமக்களிடையே துப்பாக்கிகள் வைத்திருப்போருக்கான சோதனைகளை மேற்கொள்வர் என்று பிரதமர் அனுட்டின் வலியுறுத்தினார்.
துப்பாக்கிகளை வைத்திருக்க, குறிப்பாகப் பொது இடங்களில் அவற்றை வைத்திருக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று அவர் கூறினார்.


