ஜாகர்த்தா: இந்தோனீசியாவில் மழைக்காலம் வழமையைவிடக் குறுகியதாக இருக்கும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 22) தெரிவித்துள்ளது. இதனால் பயிர் அறுவடை தள்ளிப்போவதுடன், விவசாயிகளின் நாற்று நடும் அட்டவணையும் பாதிப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் 61 விழுக்காட்டு நிலப்பரப்பில் தாமதமாக மழைத் தொடங்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. அக்டோபரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட மழைக்காலம், தற்போது நவம்பர் தொடக்கத்தில்தான் பெரும்பாலான பகுதிகளில் பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
‘சூப்பர் எல் நினோ’ வானிலை மாற்றத்தால் இந்தோனீசியாவில் கடுமையான வறட்சியும் 11 ஆண்டுகளில் இல்லாத காட்டுத்தீச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்த எல் நினோ பாதிப்பு 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மழைக்காலம் தாமதமாவதால் இந்தோனீசியாவின் முக்கியப் பயிர் விளைச்சல்கள் கடுமையாகப் பாதிக்கப்படலாம். வறட்சி காரணமாகக் கொக்கோ பயிர் உற்பத்தி ஏற்கெனவே 15 விழுக்காடுவரை குறைந்துள்ளதாக விவசாய அமைப்புகள் தெரிவிக்கின்றன. செடிகளைப் பாதுகாக்க லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல், கரும்பு உற்பத்தியும் வழக்கத்தைவிட தாமதமாகும் என கரும்பு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மழைக்காலத்தை நம்பியே செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடவுப் பணி தொடங்கப்படும் என்பதால், தண்ணீர்ப் பற்றாக்குறையால் 2027ஆம் ஆண்டின் விளைச்சல் பெருமளவில் குறையக்கூடும்.
நீர்ப்பாசன வசதியற்ற 30 விழுக்காட்டு நெற்பயிர் விளைச்சல் வறட்சியால் பாதிக்கப்பட்டு, அரிசி உற்பத்தி 10 விழுக்காடு வரை சரியக்கூடும். பாமாயில் உற்பத்தி 2 முதல் 8 விழுக்காடு வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
