அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள நியூவார்க் லிபர்ட்டி அனைத்துலக விமான நிலையத்தில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானத்தின் இறக்கைப்பகுதி மற்றொரு விமானத்தின் வால் பகுதியுடன் உரசியது. செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அமெரிக்க ஊடகமான சிபிஎஸ் நியூஸ் வெளியிட்ட தகவலின்படி, காலை 10 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி இரவு 11 மணி) எஸ்ஐஏவும் அமெரிக்க மலிவுக் கட்டண விமான நிறுவனத்தின் ஸ்பிரிட் ஏர்லைன்சும் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் ஏற்பட்டது.
இது குறித்து விளக்கமளித்த எஸ்ஐஏ, எஸ்கியூ21 விமானத்தை இயக்கிய A350-900 வகை ஏர்பஸ் விமானம், ஓடுபாதையில் பின்னோக்கிச் சென்றபோது அதன் இறக்கை நுனிப் பகுதி, ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தின்மீது பட்டது.
இதைத்தொடர்ந்து, விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர். அவர்களுக்கு உணவும் சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன.
ஆறரை மணி நேரம் தாமதம்
எஸ்ஐஏவின் பொறியாளர்களின் ஆய்வுக்குப் பிறகு, விமானம் மீண்டும் புறப்படுவதற்குத் தகுதியானது என உறுதிசெய்யப்பட்டது. ஆறு மணி நேரம், 34 நிமிடங்கள் தாமதத்திற்குப் பிறகு புதிய விமானிகள், சிப்பந்திக் குழுவினருடன் அந்த விமானம் செவ்வாய்க்கிழமை மாலை 4.09 மணிக்கு நியூவார்க்கிலிருந்து புறப்பட்டது.
“வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். எங்களின் பயணிகள், ஊழியர்களின் பாதுகாப்பே எங்களது தலையாய முன்னுரிமை,” என்று எஸ்ஐஏ தெரிவித்தது.
மறுபுறம், ஸ்பிரிட் ஏர்லைன்சின் பாதிக்கப்பட்ட ஏர்பஸ் ஏ321நியோ விமானம், பராமரிப்புக் குழுவினரின் ஆய்வுக்காக தற்காலிகமாகச் சேவையிலிருந்து நீக்கப்பட்டது.

