கோலாலம்பூர்: மலேசியாவின் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் சனிக்கிழமை (ஜூன் 13) பிற்பகல் 1.27 மணியளவில், சிங்கப்பூர் ஏர்லைன்சுக்குச் சொந்தமான போயிங் 737-8 ரக எஸ்கியூ 114 விமானம் தரையிறங்கியபோது அதன் இரண்டு டயர்கள் வெடித்தன.
இதைத் தொடர்ந்து, விமான நிலையத்தின் ஓடுபாதை ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டது.
விமானத்தில் இருந்த 147 பயணிகளும் எட்டு ஊழியர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டு, பேருந்துகள் மூலம் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட விமானம் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக இழுத்துச் செல்லப்பட்டதால், அன்றைய தினம் கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் திரும்ப வேண்டிய எஸ்கியூ113 விமானச் சேவை ரத்து செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்குத் தங்கும் வசதி மற்றும் மாற்று விமானச் சேவைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஏற்பாடு செய்து தந்தது.
விபத்துக்குள்ளான ஓடுபாதை சனிக்கிழமை இரவு 7.40 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்ட வேளையில், பழுதுபார்க்கப்பட்ட விமானம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) காலை சிங்கப்பூர் திரும்பியது.
வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கே தங்களது முதல் முன்னுரிமை என்று கூறி, இந்த இடையூறுக்குச் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

