சிட்னி: சிட்னி போண்டாய் கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடைபெற்று ஒரு வாரம் ஆன நிலையில் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தினர்.
ஆஸ்திரேலியாவின் பிரபலமான இந்தக் கடற்கரையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
போண்டாய் கடற்கரையில் யூதர்களின் ஹனுக்கா விழா நடைபெற்றபோது தந்தையும் மகனும் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதனால் ஆஸ்திரேலியா அதிர்ச்சியில் மூழ்கியது. ஆஸ்திரேலிய வரலாற்றில் இதுவரை இல்லாத இந்த மிகக் கொடூரமான தாக்குதல், ஐஎஸ் தீவிர சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு நடந்துள்ளது என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உள்ளூர் நேரப்படி துப்பாக்கிச் சூடு நடைபெறுவதாக தகவல் வெளியான அதே மாலை 6.47 மணியளவில் ‘இருளுக்கு மேல் ஒளி’ என்ற கருப்பொருளில் நாடு முழுவதும் ஆஸ்திரேலியர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
சிட்னி துறைமுகப் பாலம் உட்பட நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன.
சம்பவத்தில் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காகவும் யூத சமூகத்திற்கு ஆதரவாக இருப்பதைக் காட்டுவதற்காகவும் மக்கள் தங்கள் சன்னல்களில் மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் தெரிவித்திருந்தார்.
“இன்று நம்முடன் இருக்க வேண்டிய 15 ஆஸ்திரேலியர்களுக்கு அஞ்சலி அரிப்பணிக்கப்படுகிறது,” என்று போண்டாய் கடற்கரையில் நடைபெறும் நினைவுக் கூட்டங்களில் கலந்து கொண்ட அல்பனீஸ் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“வெறுப்பும் வன்முறையும் ஆஸ்திரேலியர்களை ஒரு போதும் பிரதிபலிக்காது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே போண்டாய் கடற்கரையில் நிரந்தர நினைவுச் சின்னம் அமைப்பது குறித்து யூத சமூகத்தினரிடம் மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அது மட்டுமின்றி, புத்தாண்டில் மறைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

