ஹாங்காங்கில் உள்ள வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற சிங்கப்பூர் ஆடவருக்கு அங்குள்ள உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவிருக்கிறது.
லியொங் ஹாவ் செங் என்ற 75 வயது ஆடவர் விளையாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு வங்கியில் கொள்ளையடிக்க முயன்றார்.
அதன் தொடர்பில் சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை லியொங் நேற்று (மார்ச் 10) ஒப்புக்கொண்டதாக ஹாங்காங் நாளேடான மிங் பாவ் தெரிவித்தது.
2022ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி காவ்லுனின் நாதன் சாலையில் உள்ள சைனா கன்ஸ்ட்ரக்ஷன் வங்கிக் கிளை கொள்ளையடிக்கப்படுவதாகக் காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
வங்கிக்கு வந்த லியோங், ‘நாங்கள் துப்பாக்கி வைத்திருக்கிறோம். பணத்தைச் சீக்கிரமாகப் பைக்குள் வைக்கவேண்டும். ஒத்துழைக்காவிட்டால் சுட்டுவிடுவோம்’ என்று மிரட்டல் விடுக்கும் துண்டுச்சீட்டை வங்கி ஊழியரிடம் கொடுத்ததாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
அப்போது எச்சரிக்கை கருவியில் இருந்த ஒரு பண நோட்டை வங்கி ஊழியர் எடுத்ததை அடுத்து வங்கி நிர்வாகிக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
துண்டுச்சீட்டைக் கொடுத்ததிலிருந்து வங்கியைவிட்டு வெளியேறும் வரை வங்கி ஊழியரை நோக்கி விளையாட்டுத் துப்பாக்கியை லியோங் நீட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திலிருந்து 2,400 வெள்ளி ரொக்கத்துடன் தப்பியோடிய லியோங்கை அதிகாரிகள் 7 மணி நேரத்துக்குப் பின் அவரது இல்லத்தில் கைதுசெய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
லியோங் பின்னர் கொள்ளையடித்த பணத்தில் சிலவற்றை வாடகைக்கும் கைப்பைக்கும் செலவிட்டதை ஒப்புக்கொண்டார்.
மொங் கொக் கோல்டன் பிளாசாவில் உள்ள மேனினிங்ஸ் மருந்துக் கடையிலும் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொள்ளை முயற்சியில் லியோங் ஈடுபட்டது அதிகாரிகள் விசாரணையில் பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது.
அங்கேயும் காசாளருக்கு மிரட்டல் விடுக்கும் துண்டுச்சீட்டை லியோங் கொடுத்திருக்கிறார்.
நீதிமன்றத்தில் அளித்த காணொளி சாட்சியில் சிங்கப்பூரில் பிறந்த லியோங் 2007ஆம் ஆண்டு ஹாங்காங்குக்குச் சென்றதாகச் சொன்னார்.
லியோங்கின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.