மலேசிய டாக்சிகளுக்கு சிங்கப்பூரில் கூடுதலாக 5 இடங்கள்: ஜோகூர் யோசனை

2 mins read
b09cbe29-d35b-4bd0-8729-dbb45c0d572a
ஜோகூர் மாநில நிர்வாக மன்ற உறுப்பினர் முஹம்மது ஃபாஸில் முஹம்மது சாலே.  - படம்: த ஸ்டார்

குளுவாங்: மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பயணிகளை ஏற்றவும் இறக்கவும் டாக்சிகளுக்குக் கூடுதல் இடங்களை ஒதுக்குவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருவதாக ஜோகூர் மாநில நிர்வாக மன்ற உறுப்பினர் முஹம்மது ஃபாஸில் முஹம்மது சாலே தெரிவித்து உள்ளார்.

அவர் சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) கூறுகையில், “தற்போதைய நிலவரப்படி, மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் டாக்சிகள் சிங்கப்பூரின் ரோச்சோர் ரோட்டில் உள்ள முகப்பில் மட்டுமே பயணிகளை இறக்கி விடவும் ஏற்றிச் செல்லவும் முடியும்,” என்றார்.

“அதேபோல மலேசியாவுக்கு வரும் சிங்கப்பூர் டாக்சிகள் ஜோகூரின் லார்கின் சென்ட்ரலில் மட்டுமே பயணிகளை இறக்கிவிட முடியும்.

“இந்த இடங்களை தரப்புக்கு ஐந்தாக உயர்த்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதாவது, மலேசிய டாக்சிகளுக்கு சிங்கப்பூரில் கூடுதலாக ஐந்து இடங்களும் அதேபோல சிங்கப்பூர் டாக்சிகளுக்கு ஜோகூரில் கூடுதலாக ஐந்து இடங்களும் ஒதுக்க உத்தேசிக்கப்படுகிறது.

“இது முதற்கட்ட யோசனை. இரண்டாம் கட்டமாக, நேரடி பயணச் சேவைகளை வழங்க சில வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்,” என்றார் திரு முஹம்மது ஃபாஸில்.

இணையம் வாயிலாகப் பதிவு செய்யப்படும் எல்லை தாண்டிய டாக்சிச் சேவைகள் குறித்து மலேசிய போக்குவரத்து அமைச்சிடம் பேசப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“மலேசியாவின் இணைய டாக்சி சேவைகள் சிங்கப்பூரில் தடை செய்யப்படுவதுவோல சிங்கப்பூரின் அதுபோன்ற டாக்சிகள் மலேசிய போக்குவரத்து அமைச்சின் நடவடிக்கையை எதிர்நோக்கின,” என்று கூறினார் ஜோகூர் மாநில பொதுப் பணி, போக்குவரத்து, உள்கட்டமைப்பு மற்றும் தொடர்புக் குழுத் தலைவருமான திரு முஹம்மது ஃபாஸில்.

ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சட்டவிரோத டாக்சி சேவையில் ஈடுபட்டதாக ஆகஸ்ட் 5ஆம் தேதி 19 ஓட்டுநர்கள் பிடிபட்டனர். அதேபோல ஆகஸ்ட் 9ஆம் தேதி மலேசியாவின் சாலைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள், சட்டவிரோத டாக்சி சேவைக்காக சிங்கப்பூர் வாகனங்களைப் பிடித்தனர்.

குறிப்புச் சொற்கள்