பேங்காக்: மியன்மாரில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் வன்செயல்கள் முடிவுக்கு வரவேண்டும் என்றும் ஜனநாயகவாதி ஆங் சான் சூச்சி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் சிங்கப்பூர் குரல் கொடுத்து உள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) தமது ஃபேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
“மியன்மாரில் தொடர்ந்து வரும் வன்முறைச் சம்பவங்கள், குறிப்பாக அந்நாட்டின் குடிமக்களுக்கு எதிராக நடைபெற்று வரும் வன்செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்,” என்று அவர் அந்தப் பதிவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதர ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுடனான கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக டாக்டர் விவியன் பேங்காக் சென்று உள்ளார்.
“ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்ந்து ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் ஆன நிலையிலும் மியன்மாரின் நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது.
“அதனால், அந்நாட்டு மக்கள் பெரும் சிரமங்களைச் சந்திப்பது தொடர்ந்து வருகிறது,” என்றும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், ஆங் சான் சூச்சியை விடுதலை செய்வது தேசிய நல்லிணக்கத்துக்கு மிகவும் இன்றியமையாத செயல் என்றும் டாக்டர் விவியன் தெரிவித்து உள்ளார்.
“மியன்மாரில் அமைதியை ஏற்படுத்துவதற்கான நீடித்த தீர்வை எட்ட அங்குள்ள முக்கிய அமைப்புகள் ஒன்றுசேர்ந்து ஆக்ககரமான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது அவசியம்,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
மியன்மாரில் தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களுக்கு டாக்டர் விவியன் சிங்கப்பூரின் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சூச்சி அம்மையாரின் அரசாங்கம் 2021 பிப்ரவரியில் நடைபெற்ற ராணுவப் புரட்சியால் கவிழ்ந்தது. அப்போது முதல் அந்த அம்மையார் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
தற்போதைய ராணுவ நிர்வாகம், அந்த 79 வயது அம்மையாருக்கு எதிராக ஊழல் மற்றும் தேசத் துரோகக் குற்றசாட்டுகளைச் சுமத்தி விசாரணை நடத்தி வருகிறது.
அந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 27 ஆண்டு சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்படலாம்.