$4.35 மில்லியன் செலவு; ஊழியர்களுக்கு சிங்கப்பூர் நிறுவனம் பெருவிருந்து

$4.35 மில்லியன் செலவு; ஊழியர்களுக்கு சிங்கப்பூர் நிறுவனம் பெருவிருந்து

2 mins read
e19cd43b-fd18-4c6b-8245-af6c5b476590
உணவு, மேசைகளுக்கு மட்டுமே 30 மி. நியூ தைவான் டாலர் செலவானதாகச் சொல்லப்படுகிறது. படம்: ரிவே இன்டர்நேஷனல்/ஃபேஸ்புக் -

வாண வேடிக்கை, முன்னணி இசைக் கலைஞர்களின் மேடை நிகழ்ச்சிகள், 2,600 உணவுமேசைகளில் சுவையான 12 வகை உணவு!

இவையெல்லாம் ஏதோ திருவிழா போன்ற முக்கிய நிகழ்ச்சியில் இடம்பெற்றதாக நினைத்துவிடாதீர்கள்!

சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று, தனது 26,000 ஊழியர்களுக்கு இப்படியொரு விருந்தளித்து அசத்தியிருக்கிறது.

ஆனால், இந்த மாபெரும் விருந்து நிகழ்ச்சி இடம்பெற்றது சிங்கப்பூரில் அன்று, தைவானில்!

உடல்நலம் சார்ந்த பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான சிங்கப்பூரின் ரிவே இன்டர்நேஷனல், தைவானின் காவ்ஷியுங் நகரில் இந்த 'மெகா' விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த மாபெரும் விருந்து நிகழ்ச்சி பற்றி அறிந்த ஃபேஸ்புக் பயனர்கள், தாங்கள் கண்டதிலேயே 'வியத்தகு பெருநிறுவன விருந்து' இதுதான் என்று கருத்துரைத்துள்ளனர்.

இதுகுறித்துக் கேட்டதற்கு 'ரிவே' நிறுவனம் உடனடியாகப் பதிலளிக்கவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது.

ஆயினும், இந்த விருந்து நிகழ்ச்சிக்கு 100 மில்லியன் நியூ தைவான் டாலர் (S$4.35 மி.) செலவாகியிருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று அந்நிறுவனத்தின் பேச்சாளர், தைவானின் 'கமர்ஷியல் டைம்ஸ்' நிறுவனத்திடம் தெரிவித்தார். உணவு, மேசைகளுக்கு மட்டும் 30 மி. நியூ தைவான் டாலர் செலவானதாக அவர் குறிப்பிட்டார்.

விருந்தில் பங்கேற்ற 26,000 பேரில் பெரும்பாலோர் அந்நிறுவனத்தின் ஊழியர்களும் விற்பனைப் பிரதிநிதிகளுமே எனக் கூறப்பட்டது.

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனீசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருக்கும் அந்நிறுவனத்தின் கிளை அலுவலகங்களில் பணியாற்றுவோரும் மற்ற விற்பனைப் பங்காளிகளும் விருந்தினரும் அதில் கலந்துகொண்டதாக உள்ளூர் ஊடகச் செய்திகள் கூறின.

'ரிவே' நிறுவனத்தின் 15வது ஆண்டுநிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த மாபெரும் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.