பத்தாண்டுகளில் காணாத புதிய உச்சத்தை சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு எட்டியுள்ளது.
அமெரிக்க டாலருடனான சிங்கப்பூர் வெள்ளியின் பரிவர்த்தனை விகிதம் ஆகஸ்ட் 23ஆம் தேதி எட்டிய நிலை, கடைசியாக 2014ஆம் ஆண்டுக்கு ஒப்பானது.
தொடர்ந்து ஆகஸ்ட் 26ஆம் தேதி சிங்கப்பூர் நாணயம், ஓர் அமெரிக்க டாலருடனான பரிவர்த்தனையில் சுமார் 1.30 என்றிருந்து பின்னர் பகல் 2.05 மணியளவில் 1.3019 எனச் சற்று ஏற்றம் கண்டது.
சிங்கப்பூர் நாணயம் 2024ஆம் ஆண்டு ஏறத்தாழ 1.5% ஏற்றம் கண்டுள்ளது. இதன்படி ஆசியாவில் தற்போது மலேசிய ரிங்கிட்டுக்குப் பிறகு அடுத்தபடியாக அதுவே வலுவான நாணயமாக விளங்குகிறது.
அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பாவெல் ஆகஸ்ட் 23ஆம் தேதி வங்கியின் வருடாந்தரக் கருந்தரங்கில் செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவதை உறுதிசெய்வது தொடர்பாகப் பேசினார்.
சிங்கப்பூர் நாணய ஆணையம் அதன் பிரதான நாணயக் கொள்கைக்காக நாணயப் பரிவர்த்தனை விகிதத்தைப் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ஜூலை மாதம் நாணய மதிப்பை ஏற்றமாகவே தக்கவைத்திருந்தது.
மேலும், 2024ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி முன்னுரைப்பை சிங்கப்பூர் அரசாங்கம் ஜூலையில் உயர்த்தியது. முன்னதாக, 1 முதல் 3 விழுக்காட்டு வரம்பை அது பின்னர் 2 முதல் 3 விழுக்காட்டு வரம்பாக மாற்றியது.
நாணய மதிப்பு அதிகரிக்க, பொருளியல் வளர்ச்சியும் கைகொடுக்கும்.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், அமெரிக்க டாலருடனான சிங்கப்பூர் நாணயத்துக்குப் பதிவாகும் குறுகியகால நன்மைகள் இதற்கு மேல் அதிகரிக்காது என்று கூறப்படுகிறது.