ஜோகூர் பாரு: அக்டோபர் 1ஆம் தேதி கெடுவுக்குப் பின்னரும் வாகன நுழைவு அனுமதி இன்றி (விஇபி) மலேசியாவுக்குள் நுழையலாம் என அறிவிக்கப்பட்டாலும் சிங்கப்பூர் வாகன ஓட்டுநர்கள் ஜோகூரின் டங்கா பேயில் உள்ள டிசிசென்ஸ் மையத்தில் குவிந்திருந்ததை சனிக்கிழமை (செப்டம்பர் 28) காணமுடிந்தது.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் பேசிய ஓட்டுநர்களிடம் கவலையும் எந்த நேரத்திலும் நிலைமை மாறலாம் என்ற கருத்தும் நிரம்பி இருந்தது.
விஇபி (VEP) இல்லாவிட்டாலும் சிங்கப்பூர் வாகன ஓட்டுநர்கள் ஜோகூர் வழியாக நுழையலாம் என்று மலேசியாவின் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) தெரிவித்து இருந்தது.
இருப்பினும், இரண்டு சோதனைச் சாவடிகள் வாயிலாக ஜோகூருக்குள் நுழைந்ததும் ஆர்எஃப்ஐடி (RFID) குறியீட்டுக்குப் பதிவு செய்து அதனைப் பொருத்திக்கொள்ளுமாறும் அந்த ஓட்டுநர்கள் நினைவூட்டப்படுவார்கள் என்று ஓர் அறிவிப்பை விஇபி அமலாக்க முகவை வெளியிட்டது.
அந்த நினைவூட்டலுடன், மலேசியாவை விட்டு வெளியேறும் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்படும். விஇபி வில்லையை கூடிய விரைவில் பொருத்த வேண்டும் என்பதே அந்த எச்சரிக்கை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், விஇபி இல்லாமல் ஜோகூருக்குச் செல்லலாம் என்னும் சலுகை மீது நம்பிக்கையின்றி பெரும்பாலான வாகன ஓட்டுநர்கள் காணப்பட்டனர்.
அவர்களில் ஒருவரான லோய் மெய் என்னும் ஐம்பதுகளில் உள்ள பெண்மணி, விஇபி வில்லைக்காக இரு வாரங்களாகக் காத்திருப்பதாகவும் அது தமது வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிட்டதா என்பதை அறிய வரிசையில் காத்திருப்பதாகவும் கூறினார்.
சைமன் லிம் என்னும் அரசு ஊழியரும் எரிச்சலை வெளிப்படுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
“ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னரும் பதில் இல்லை. விஇபி பெறுவது தொடர்பான விஷயம் எங்கள் கைகளில் இல்லை. எங்களிடம் தவறு இல்லாதபோது எச்சரிக்கை விடுக்கப்படும் என்பதில் நியாயம் இல்லை,” என்றார் அவர்.
வெளிநாட்டு வாகனங்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் வாகன நுழைவு அனுமதியைப் பெற்றிருப்பது கட்டாயம் என்று மலேசிய அரசாங்கம் கடந்த மே மாதம் அறிவித்து இருந்தது.
அனுமதி இன்றி நுழையும் வாகனங்களுக்கு 2,000 ரிங்கிட் (S$620) வரை அபராதம் விதிக்கப்படுவதோடு மலேசியாவுக்குள் நுழைவதற்கான தடையையும் எதிர்நோக்கக்கூடும் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது.

